Ads Area

வடக்கு - கிழக்கு இணைப்பை பிரிக்க உயர்நீதிமன்றம் சென்றது நாமே தற்போது மீண்டும் அதனை இணைக்க முடியாது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து, சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது. புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது, நாட்டிலுள்ள அனைவருக்கும் சம அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைத்திருந்தோம். அதுவே எமது நிலைப்பாடு என ஜேவிபியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் சில புத்திஜீவிகள் யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்து பல தரப்புக்களையும் சந்தித்திருந்தனர். இதன் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைத்து, கூட்டாட்சி (சமஷ்டி) முறையிலான அதிகாரப் பரவலாக்கத்துடன், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வைப் பெற்றுத்தர நாங்கள் முயற்சிப்போம்.இது தொடர்பான அழுத்தங்களை இப்போதே மக்கள் விடுதலை முன்னணியிடம் கொடுக்க ஆரம்பித்துள்ளோம். எனவே, தமிழ் மக்கள் மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் வினவியபோது,

“தேசிய மக்கள் சக்தியில் பல அமைப்புக்கள் உள்ளன. மக்கள் சக்தி இயக்கம் மக்கள் விடுதலை முன்னணியை தலைமையாகக் கொண்டு போட்டியிடுகின்றது. இந்த இயக்கத்தை ஆதரிக்கின்ற பல அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் பல கருத்துக்களையும் சொல்லலாம். ஆனால், அது மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தாகவோ, எனது கருத்தாகவோ அமையாது.

வடக்கு - கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தை நாடியது எமது கட்சியே. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கமைய வடக்கு - கிழக்கு இணைப்புப் பிரிக்கப்பட்டது.

நாம் இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைக்க முடியாது. கூட்டாட்சித் தீர்வான சமஷ்டித் தீர்வை வழங்க முடியாது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் போது எமது கட்சி சார்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில், நாட்டில் உள்ள அனைவருக்கும் சம உரிமை என்பதையே வலியுறுத்தியிருந்தோம். அதுதான் எமது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe