இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகரித்துள்ள நிலையில், முஸ்லிம்கள் மரணித்தால் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியுமா, என்ற மிகப்பெரும் கவலை சமூக மட்டங்களில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்ததுடன், இதுபற்றி கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், இதில் கவனம் செலுத்தியது. ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் முஸ்லிம் சமூகத்தின் இந்தக் கவலையை, அரச மேல் மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
இதையடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்டு, முஸ்லிம்கள் யாரும் மரணிப்பார்களாயின், அவர்களின் உடல்களை இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யலாம் என அரச மேல் மட்டம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
இது முழு இலங்கைக்கும் பொருந்தக்கூடியது எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தகவல் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கும், அறியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.