நாடாளுமன்ற கடந்த 19 ஆம் திகதி 7 நிமிடங்கள் மட்டும் கூடிக் கலைந்தது. அதற்கு முன்னரான மூன்று அமர்வுகளிலும் சண்டை பிடித்து, கட்டிப் புரண்டவர்கள், கத்தி, மிள்காய்த் தூள் வைத்திருந்ததாக ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டியவர்கள் அனைவரும் 19 ஆம் திகதிய 7 நிமிட அமர்வின் பின்னர் அனைத்தையும் மறந்தவர்களாக, நகைச்சுவையாக ஒருவர் முதுகில் ஒருவர் தட்டிச் சிரித்து தமக்குள் ஒன்றுமே நடக்காதவர்கள் போன்றும் நடந்து கொண்டனர். ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்தும் நகைச்சுவையாகப் பேசியும் மகிழ்ந்த காட்சிகளை நான் கண்குளிர, கண் பனிக்கக் கண்டேன்.
ஒரு புறத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் மிக நெருக்கமாக, சிரித்து முகத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அதே போன்று ஆளுந்தரப்பைச் சேர்ந்த பலரும் ஹக்கீம் அவர்களை சூழ்ந்து கொண்டு குதூகலித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
மறுபுறத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களைப் பார்த்து பிரதமர் மஹிந்த அவரையும் நோக்கி அன்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தார் . இதற்கு மேல் ஒருபடியாகச் சென்று அமைச்சர்களான ஹிஸ்புல்லாஹ், உதய கம்பன்வில உட்பட பலரும் நமது தலைமைகளான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியதீன் ஆகியோரை மொய்த்து நின்று சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். அமைச்சர் உதய கம்பன்வில ரிஷாதின் தோளில் கைபோட்டு ஜொலியாகப் பேசிய காட்சிகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்.
இதனை எல்லாம் அவதானித்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களை அழைத்து மிக நேசத்துடன் உரையாடிக் கொண்டிருந்தார். அதேபோன்று மஹிந்த தரப்பைச் சேர்ந்த மேலும் பலரும் ரணிலுடன் ரொம்பவும் ஐக்கியமாக நடந்து கொண்டனர். ரணில் மஹிந்தவைப் பார்க்க, மஹிந்த ரணிலைப் பார்க்க, இருவரும் புன்னகைக்க….. இப்படி ஒரு நேசமிக்க வரலாற்றுக் காவியமே அங்கு காணப்பட்டது.
இந்தக் காட்சிகளை எல்லாம் நான் அவதானித்த போது, கடந்த 26 ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டு அரசியலிலோ நாடாளுமன்றத்திலோ எதுவுமே நடைபெறவில்லை. எல்லாம் பழையபடி சரியாகத்தான் உள்ளது இந்த நிலையில், மக்கள்தான் (என்னையும் சேர்த்தே) இந்த நாட்களில் இவ்வாறெல்லாம் நடப்பதாக பகல் கனவு காண்கிறார்களோ தெரியாது என்ற எண்ணம் என் மனதுக்குள் தோன்றியது.
வெளியில் இரண்டு நண்பர்கள் முரண்பட்டு சண்டை பிடித்தால் கூட அவர்களின் கோபம் தணிந்து மீண்டும் இருவரும் பேசிக் கொள்வதற்கு ஆக்குறைந்தது ஒரு மாதமாவது செல்லும். ஆனால் இந்த விஷயத்தில் நமது அரசியல்வாதிகள் நல்லவர்கள் போல் தெரிகிறது. எல்லாம் ‘குயிக் எக்க்ஷன்’
இந்த நிலையில், இவர்கள் எல்லாம் இப்படி நடந்து கொள்ள, முகநூல் நண்பர்களான நாங்கள் மட்டும் இந்த அரசியல்வாதிகளுக்காக முரண்பட்டு, சண்டை பிடித்து, மிக மோசமான பதிவுகள், பின்னூட்டங்களையும் இட்டுக் கொண்டிருப்பதனை நினைக்கும் போது எனக்கும் கவலைதான்.
அவர்கள் சமாதானமடைந்து விட்டாலும் நம்மில் பலர் விட்டபாடில்லை. தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டும் சில வேளைகளில் வீட்டிலுள்ள உம்மா, வாப்பா, பிள்ளை குட்டிகள் மனைவி அனைவரையம் அநியாயமாக இழுத்து ஏசிப் பேசிக் கொண்டே இருக்கிறோம். ‘பொன்னையன்’ ‘ஹராம்குட்டி’, ‘வேசைமகன்’ மகன் என்றெல்லாம் பொது வெளியான முகநூலில் திட்டிக் கொள்கிறோம்.
ஆனால், அரசியல்வாதிகளோ ‘ஹாய் மச்சான்,’ ‘இத்திங் கோமதா,’ என்றெல்லாம் நட்புப் பாராட்டி :அம்ப யஹுலுவோ' போன்று நெருக்கமாகிக் கொள்கின்றனர்.
எனவே, இந்த விடயத்தில் நாங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து, அவர்களின் இவ்வாறான நல்ல விடயங்களை மட்டுமாவது கற்றுக் கொள்வது சிறந்ததுதானே? அதற்கு இப்போது கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவோமாக! நாம் ஒவ்வொருவரும் ஒவ்வவொரு அரசியல் தலைமைகளின் ஆதரவாளர்கள் என்பதற்கு அப்பால் இந்த விடயத்தில் சிந்தித்துச் செயற்பட்டால் நல்லதுதானே?
(குறிப்பு இங்கு ஆதாரத்துக்காக நான்கு படங்களை வெளியிட்டுள்ளேன். இதனை விடவும் மிக முக்கியமான படங்களை பல இணையத்தளங்களும் பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. அந்தப் படங்களை பதிவிடுவதாயின் அதற்கான அனுமதியை நான் அவர்களிடம் பெற வேண்டியுள்ளதால் வெளியிட முடியாதுள்ளது.
சிந்திப்போம்.. செயற்படுவோம் இவ்வாறு பதிவிட்டதற்கும் பலர் என்னைத் தூற்றினாலும் ஆச்சரியப்படத் தேவை இல்லை!
-ஏ.எச்..சித்தீக் காரியப்பர்.