லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வருகிற ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா, புத்த பூர்ணிமா உள்ளிட்ட விசேஷ நாட்கள் வருகின்றன. அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள்.
இதனால் விசேஷ நாட்களில் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களில் தங்கி செல்வார்கள்.
அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் திருமணம் நடத்த தடை விதித்து முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
எனவே மாவட்ட நிர்வாகங்கள் அனைத்து திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஓட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.