Ads Area

நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்.


நீர், சுகாதார வசதிகளை மேம்படுத்த உலக வங்கியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடல்

உலக வங்கியின் நிதியுதவியுடன் ஏழு மாவட்டங்களை இணைத்து நீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், உலக வங்கியின் பணிப்பாளர் வொஷிங்டன் மற்றும் பயிற்சி முகாமையாளர் டி.சி. தகுயா கமட்ட ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நாட்டில் நிலவும் நீர்ப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நீர் மூலங்களை இனம்கண்டு புதிய நீர்த் தேக்கங்களை உருவாக்குவதற்காக நீர் வழங்கல்,  நீர்ப்பாசன மற்றும் மகாவலி ஆகிய அமைச்சுகளை உள்ளடக்கிய செயற்றிறன் படையொன்றை உருவாக்குவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த அமைச்சுகளின் பணிப்பாளர்களின் தலைமையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்கு குழாய் மூல கிணறுகள் மற்றும் சமூக நீர்ப்பாசன வசதிகளை பெற்றுக்கொள்ள புதிய நீர்த்தேக்கங்களை நிர்மாணிப்பது தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. வறுமை ஒழிப்பு, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல் தொடர்பில் அமைச்சர் மேலும் முக்கிய விளக்கங்களை வலியுறுத்தினார்.

இச்சந்திப்பின் பின்னர் நீர் வழங்கல் அமைச்சுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு உலக வங்கி தனது இணக்கத்தை வெளியிட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னெ, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ. அன்ஸார், நீர்ப்பாசனம் மற்றும் சுகாதார மேம்பாட்டுக்கான உலக வங்கியின் செயற்குழு பணிப்பாளர் எம்.யூ.கே. ரணதுங்க, திரூனி லியனகே மற்றும் பிரதிபா மிஸ்டரி உட்பட முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe