Ads Area

அமைச்சர் ஹரீஸ் தனக்கென ஒரு தனி இராஜியத்தை கட்டியெழுப்ப முனைப்பு.

இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கல்முனை மண் மீது கொண்ட அளப்பரிய பற்றினால், கல்முனை மண்ணை பாதுகாக்கும் சிந்தனையோடு உருவாக்கப்பட்ட, உருவான ஒரு அமைப்பே மெஸ்ரோவாகும். ஆரம்பத்தில் மிக வீரியத்தோடு இவ்வமைப்பு செயற்பட்டாலும், பிற்பட்ட காலப்பகுதியில் மிக அமைதியாக இயங்கியது. தற்போது மீண்டும் முன்னரை விட பன் மடங்கு வேகமாக செயல்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வமைப்பு இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கும் மிகப் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்த ஒரு அமைப்பு என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வமைப்பானது இதுவரை கல்முனைக்குள் தனது எல்லையை சுருக்கி கொண்டிருந்த போதும், தற்போது அம்பாறை மாவட்டம் பூராகவும் தனது எல்லையை விரிவாக்கியுள்ளது. இது பல்வேறான சிந்தனைகளை எழச் செய்கிறது. இதன் மூலம் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தனக்கென ஒரு தனி இராஜியத்தை கட்டியெழுப்ப முனைவதை துல்லியமாக்கின்றது. பாராளுமன்ற தேர்தலொன்றுக்கான காலம் அண்மித்துவிட்டது உட்பட இன்னும் பல விடயங்களோடு மெஸ்றோ அமைப்பின் விரிவாக்கலுக்கான காரணியை ஆராய்வது பொருத்தமானதாயிருக்கும்.

இதுவரை மு.காவின் வாக்குகளை நம்பி அரசியல் செய்து வந்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இனியும் அதனை நம்பினால் தொடர்ந்து அரசியலில் பயணிக்க முடியாது என்ற விடயத்தை உணர்ந்ததன் வெளிப்பாடே தனி இராஜ்ஜிய பலப்படுத்துகை எனலாம். மு.கா சார்பாக தேர்தல் கேட்டால் ஒரு கணிசமான வாக்கு விழும். அதோடு, தனது கல்முனை தொகுதி மு.காவின் கோட்டையாகவிருந்தது. இது விருப்பு வாக்கில் முதன்மை வகிக்கவும் காரணமாக அமைந்திருந்தது. எனவே, இதுவரை காலமும், தனது தனிப் பலத்தை நிரூபிக்கும் தேவை ஹரீஸுக்கு இருந்திருக்கவில்லை. நோகாமல் நொங்குண்ண முடியுமென்றால், ஏன் கூத்தாட வேண்டும். ஆனால், இப்போது நிலமை தலை கீழாகவுள்ளது.

அமைச்சர் ஹக்கீமுக்கும் ஹரீஸுக்குமிடையில் மிகப் பெரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அவர் மு.காவில் இருக்கின்றாரா, இல்லையா என கேட்டால், இருக்கின்றார், ஆனால் இல்லை என்ற பதில் மிகப் பொருத்தமானது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் தன் சுய பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்குள்ளது. அமைச்சர் ஹக்கீம் ஹரீஸின் பலத்தை உணர்வாராக இருந்தால், நிச்சயம் அவரை இழக்க விரும்பமாட்டார். இராஜாங்க அமைச்சர் ஹரீஸை மு.காவின் அடுத்த தலைவராக மக்கள் இனங்காட்டிக்கொண்டிருப்பது தான் அமைச்சர் ஹக்கீமுக்கு மிகப் பெரும் தலையிடி. ஏனையோரைப் போன்று அவரும் கை கட்டி, வாய் மூடி நின்றால் பிரச்சினையில்லையல்லவா? ஹக்கீம் ஹரீஸை நோக்கி தேர்தல் காலத்தில் வாள் வீசீனால், அதனை எதிர்க்க சுய பலம் வேண்டுமல்லவா? இவ்வாறான கட்சி லேபலின்றிய தனி மனித பலத்தை நிரூபிக்கும் நிகழ்வுகளை மு.காவிலுள்ள வேறு உறுப்பினர்களால் செய்ய முடியுமா என்ற சவாலையும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இந் நிகழ்வினூடாக விடுத்துள்ளார் எனும் கோணத்திலும் நோக்கலாம்.

முன்பெல்லாம் மு.காவென்றால் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள். இப்போது அந்த நிலையில்லை. மு.காவின் கோட்டையான கல்முனை மாநகர சபை பட்ஜட்டை கூட நிறைவேற்ற பலமில்லாத நிலையிலுள்ளது மு.கா. இவ்வாறான நிலையில் இனிமேலும் மு.காவை நம்பி அரசியல் செய்வதை விட, தன் சுய பலத்தை கட்டியெழுப்புவதே பொருத்தமானது. நினைத்த நேரத்தில், நினைத்த கட்சி மாறலாமல்லவா?

அண்மையில் நடந்தேறிய ஆட்சி மாற்ற பிரச்சினையில் கொழுத்த சலுகைகள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்கு பேசப்பட்டிருந்தன. அதில் தேசிய தேசியப்பட்டியல் உறுதிமொழியும் இருந்ததான பேச்சுமுள்ளது. மீண்டும் அப்படியான ஒரு சலுகையை பேரம் பேசி பெற, இப்படி சுய பலத்தை நிரூபிப்பது பொருத்தமான நகர்வாக அமையும். இதனூடாக பெருமளவான மு.காவின் போராளிகளையும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் தன்னோடு இணைத்துள்ளார். இன்னுமொரு கட்சிக்கு மாறி தனக்கு ஆள் சேர்ப்பதை விட, மு.காவிலுள்ள நிலையில் ஆள் சேர்த்து கட்சி மாறினால், மு.காவிலுள்ள சிலரையும் தன்னோடு ஹரீஸால் அழைத்து செல்ல முடியும்.

தற்போது இராஜாங்க அமைச்சர் ஹரீஸுக்குள்ள மிகப் பெரும் சவால், தான் இதுவரை காலமும் பாரிய முயற்சிகளேதுமின்றி சாதாரணமாக பெற்று வந்த சாய்ந்தமருது வாக்குகள் சவாலுக்குட்பட்டுள்ளமைதான். அதனை சரி செய்ய அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசங்களில் தனது தனிச் செல்வாக்கை நிலை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு பல சிந்தனைகளை அடிப்படையாக கொண்ட ஒரு காய் நகர்த்தலே மெஸ்ரோ அமைப்பின் எழுச்சியாகும். இவ்வாறான நிகழ்வுகளை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் மு.காவின் இளைஞர் எழுச்சிக்காக செய்திருந்தால், அக் கட்சியின் நிலை நிச்சயம் வேறு விதமாக அமைந்திருக்கும். மு.காவின் உயரிய சலுகைகளை பெற்றவர்களில் ஒருவர் தான் ஹரீஸ். இப்போதும் அவருக்கு மு.கா இராஜாங்க அமைச்சை வழங்கி கௌரவித்துள்ளது. தனது அரசியல் இருப்புக்கு அச்சுறுத்தல் என்ற நிலை வந்ததும் துடி துடித்து வாக்கு வேட்டை வியூகங்கள் வகுக்கும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இத்தனை காலமும் மௌனமாக இருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாகும். இது தற்போது மு.காவின் உயர் மட்டத்தில் பேசப்படும் ஒரு விடயமும் கூட.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe