அம்பாறைக்கு இடமாற்றப்படவிருந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) கல்முனைப் பிராந்தியக் காரியாலயம், கல்முனை மாநகர சபைக் கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் லலித் விஜயரட்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், ஆணையாளர் எம்.சி.அன்சார், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ.பாவா, பொதுசனத் தொடர்பு அதிகாரி அலிகான் ஷாபி உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த பல வருடங்களாக தனியார் கட்டிடமொன்றில் இயங்கி வந்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாதிருப்பதையும் வாடகைப் பணம் அதிகம் செலுத்தப்படுவதாகவும் காரணம் காட்டி, அதனை மூடிவிடுவதற்கான எழுத்து மூல உத்தாவு நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் கல்முனை மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த காரியாலயத்திற்கு கல்முனை மாநகர சபையில் இடமளிப்பதற்கு அவர் தீர்மானம் மேற்கொண்டதுடன் அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.
இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு இயங்கி வந்த கட்டிடத்தில், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை அமைப்பதற்கு மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் நடவடிக்கை எடுத்திருந்தார். கல்முனை மாநகர சபையின் பொறியியல் பிரிவு, தற்போது கல்முனை பொது நூலகத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத்திறப்பு விழாவில் உரையாற்றிய மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள்;
கடந்த பெப்பரவரி மாதம் இக்காரியாலயத்தை மூடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது, எனது வேண்டுகோளையேற்று எமது கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் துரிதமாக செயற்பட்டு, இதனைக் கல்முனையில் தொடர்ந்தும் இயங்கச் செய்வதற்காக UDA தவிசாளரின் அங்கீகாரத்தை பெற்றுத்தந்தமைக்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இவ்விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் சகோதரரர் அமீர் அலி அவர்களும் தனக்குள்ள செல்வாக்கினைப் பயன்படுத்தி, உயர்மட்டத்தில் மேற்கொண்ட முயற்சிகளையும் நினைவு கூர்ந்து அவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேவேளை கல்முனைப் பிராந்திய மக்களின் தேவைகளை துரிதமாக நிறைவு செய்து கொடுக்கும் பொருட்டு, இக்காரியாலயத்தின் ஆளணி மற்றும் வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் கையொப்பமிடுகின்ற அதிகாரமுடைய உதவிப் பணிப்பாளர் ஒருவர் இக்காரியாலயத்திற்கென நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் கல்முனை மாநகரமானது சனநெரிசல் மிக்க பிரதேசமாக இருப்பதனால் 03 பேச்சர்ஸ் அளவு கொண்ட நிலத்தில் வீடு மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் முதல்வர்வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணித்தலைவர் ஹென்றி மகேந்திரன், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ரொஷான் அக்தர், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பொதுசனத் தொடர்பு அதிகாரி அலிகான் ஷாபி ஆகியோரும் உரையாற்றினர்.