Ads Area

மஹியங்கனை விபத்து சம்மாந்துறையைச் சேர்ந்தவர்களின் கோர விபத்தை ஞாபகப்படுத்துகிறது.

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சொந்த உறவுகளான 10 பேரினதும் இறுதிக்கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளன. 

இலங்கையை உலுக்கியுள்ள இந்தக் கோர விபத்துச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பைச் சேர்ந்த இவர்கள், ஹயஸ் வானில் சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோதே விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்கள்.

இந்தக் கோர விபத்தில் ஜோசப் ரெலின்டன் ஜோப்ஸ் (வயது – 56), அவரது மனைவி சில்வியா ஜோப்ஸ் (வயது – 50), அன்ரனி லிஸ்டர் அலெக்ஸாண்டர் (வயது – 35), அவரது மனைவி நிசலி அலெக்ஸாண்டர் (வயது – 27), அவர்களது இரட்டைப் பெண் பிள்ளைகளான ஹனாலி அலெக்ஸாண்டர் (வயது – 04), பைகா அலெக்ஸாண்டர் (வயது – 04), யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸ் (வயது – 48), அவரது மனைவியான மரியா பென்சியா ஹென்ரிக்ஸ் (வயது – 42), அவர்களது மகளான செரேப் ஹென்ரிக்ஸ் (வயது 10), அவர்களது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்ரிக் (வயது – 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இவர்களுடன் ஹயஸ் வானில் சென்ற யூட் பிரின்ஸ் ஹென்ரிக்ஸின் மகளான செகானி ஹென்ரிக்ஸ் (வயது – 13) மற்றும் ரெசானி பெர்கஸால் (வயது – 16) ஆகியோர் படுகாயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இருவரும் அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்றைய இந்த விபத்தானது கடந்த 2015-12-30 அன்று கொழும்பு – கண்டி பிரதான வீதியிலுள்ள வறக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மலதெனிய எனுமிடத்தில் இடம் பெற்ற பாரிய விபத்தினை ஞாபகப்படுத்திச் செல்கிறது.

வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குபட்ட ஏ 01 கொழும்பு- கண்டி பிரதான வீதியில் தும்பலதெனிய பகுதியில் பொல்கஸ் ஓவிட்டவிலிருந்த சோமாவதி புனித தலத்தை தரிசிப்பதற்காக யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் வண்டியொன்றும் சம்மாந்துறையிலிருந்து உம்ரா பயணத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் விபத்துக்குள்ளதானதில் சம்மாந்துறைச் சேர்ந்த ஆறுபேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த கோர விபத்தானது சம்மாந்துறை உட்பட முழு இலங்கையும் அந்த நேரம் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

இவ்விபத்தில் வேன் சாரதியான சம்மாந்துறை நெசவாலை வீதியைச்சேர்ந்த முகம்மது தம்பி அகமட் இபாத் (வயது-29), வீரமுனை 03 பிரிவினைச்சேர்ந்த சின்னத்தம்பி பாத்திமா பரூஸா (வயது- 26) இவரின் குழந்தையான சிராஜ் பாத்திமா சாரா (வயது- 2.5), செந்நெல் கிராமம் 02 பிரிவைச் சேர்ந்த முகம்மது இப்றாஹிம் ஹபிபத்துல் நிஸா (வயது- 69), சம்மாந்துறை 06 பிரிவைச் சேர்ந்த உதுமா லெவ்வை நுஸ்ரத் ஜஹான் (வயது- 27) மற்றும் பாத்திமா நுஸ்ரா (வயது-2)ஆகியோர் இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

இத் துக்ககரமான சம்பவத்தினைத் தொடர்ந்து சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கடைகள், வர்த்தக நிலையங்கள் என்பன மூடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. உள்ளுர் போக்குவரத்தும் இடம்பெறவில்லை. அத்துடன் வீதிகள் எங்கும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. பிரதேசமெங்கும் சோகமயமாகவே காட்சியளித்திருந்தன. சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் மரணித்தவர்களுக்காக ஊரே ஒன்று திரண்டு ஜனாசா தொழுகை தொழுது விசேட துஆப்பிரார்த்தனைகளும் செய்தனர்.


நாட்டை சோகத்தில் ஆழ்த்திய ஒரே குடும்பத்தில் உள்ள பல உயிர்களை பலியெடுத்த இப்படியான கோர விபத்துக்களில் இருந்து சாரதிகளும், பயணிகளும் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

“Better to Lose a Minute in Life than to Lose Life in a Minute.”

நமது அவசரத்தால் ஒரு நிமிடத்தில் நம் பெறுமதியான வாழ்வை தொலைப்பதை விட பொறுமையைக் கடைப்பிடிப்பதனால் ஒரு நிமிட நேரத்தை தொலைப்பதில் தவறேதுமில்லை.












Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe