Masihudeen Inamullah
போருக்குப் பின்னரான இலங்கையில் முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களை விடவும் தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர், ஏனைய சமூகங்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டு வந்தனர்.
இஸ்லாமிய அமைப்புக்கள் மதரஸாக்கள் கூட தேசப்பற்றுடன் சமாதான சகவாழ்வு இனங்களுடனான நல்லுறவிற்கு முன்னுரிமை கொடுத்து தேசிய கட்டுமானத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள தயாராகிக் கொண்டிருந்தனர்.
முஸ்லிம்கள் ஒருபொழுதும் வன்முறைகளை நாடியதில்லை எப்பொழுதுமே பொறுமை சகிப்புத் தன்மை விட்டுக் கொடுப்பு என்ற போதனைகளையே கண்டிப்பாக கடைப் பிடித்து வந்தனர்.
சமாதான சகவாழ்வை பாதிக்கின்ற விடயங்களை படிப்படியாக தவிர்ந்து வந்தனர், முடியுமான வரை உள்வீட்டு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் விட்டுக் கொடுப்புக்களை செய்து வந்தனர், விட்டுக் கொடுப்புக்கள் பற்றி எழுதியவர்களும் பேசியவர்களும் காரசாரமாக விமர்சிக்கப் பட்டனர்.
ஒவ்வொரு கல்லாக சுமந்து கட்டி எழுப்பப் பட்ட அழகிய சமூகக் கட்டமைப்பை காவுகொள்ள காத்திருந்த இன மதவெறி காடையர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ள மிகவும் முன் எச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் ஒவ்வொரு நாளையும் முஸ்லிம்கள் நகர்த்தி வந்தனர்.
தூங்குபவர்களை எழுப்பலாம் ஆனால் தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது என்பதனை நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கின்றோம், இந்த இனவெறியர்களை திருப்திப் படுத்தவே முடியாது என்பதனை உணருகிறோம், சமாதன சகவாழ்வு எனும் எமது கோஷம் கூட அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதென பகிரங்கமாகவே பேச ஆரம்பித்துள்ளார்கள்.
உண்மையில் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் மாத்திரம் தானா ? என்ற கேள்வியை கேட்கவே முடியாத அளவு தலைகுனிந்து நிற்க வேண்டிய நிலையினை ஏற்படுத்தியவர்கள் அந்த நெறிதவறிச் சென்ற இளைஞர்கள் மாத்திரம் தானா ? நாங்கள் குழப்பத்தில் இருக்கின்றோமா? அல்லது தேசத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்களா?
ஈஸ்டர் ஞாயிறு தின குண்டுவெடிப்புக்களின் பின்னர் பேராயர் மல்கொம் ரஞ்சித் அவர்களது புத்திசாதுரியமான மனிதாபிமானமான கருத்தாடல்கள், ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இலங்கை முஸ்லிம்களை சாடாதீர்கள் குற்றம்சுமத்தாதீர்கள் என்ற பலமான செய்தியின் மூலம் இலங்கையரை மாத்திரமன்றி உலகையும் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
நாங்களும் சொல்கின்றோம், இப்பொழுது கட்டவிழ்த்துவிடப் படும் காடைத் தனங்களுக்கும் காட்டு மிராண்டித் தனங்களிற்கும் ஈஸ்டர் தாக்குதல்களால் பாதிக்கப் பட்ட சகோதர கிறிஸ்தவ சமூகம் காரணமல்ல மாறாக இனமத வெறி கூலிப் படைகளை அமர்த்தி மக்களின் இரத்தங்களின் மீதும் பிணங்களின் மீதும் அரசியல் செய்ய விளைகின்ற தரப்புக்களின் மிலேச்சத்தனமான காடைத்தனங்களே இவை !