Ads Area

சீருடை சுற்றுநிருபம் இடைநிறுத்தம்! பிரதமர் ரணில் அதிரடி உத்தரவு..!

மக்கள் நண்பன் - சம்மாந்துறை அன்சார்.

கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

30 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வெளிவந்த சுற்றறிக்கையில் முஸ்லிம் பெண்களின் ஹபாயா  கலாச்சார ஆடை அணிவதற்கு தடையேற்படுத்தப்பட்டதனை அடுத்து முஸ்லிம்கள் தரப்பில் இருந்து பல்வேறுபட்ட கடும் எதிர்ப்பு நிலவியதனைத் தொடர்ந்து மேற்படி சுற்றறிக்கையினை பிரதமர் ரணில் விக்கரமசிங்க உடனடியாக இடை நிறுத்தியுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் அணிகின்ற அபாயாவுக்கு தடையாக அரச அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கான சீருடை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்றுநிருபத்தை வாபஸ் பெறுவதாகவும் அபாயாவுக்கு தடை ஏற்படாத வகையிலான புதிய சுற்றுநிருபத்தை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடுவதாகவும் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் ஆலோசனை செய்யாமல் பொதுநிர்வாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் தீர்மானித்து அச்சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை அச்சுற்று நிருபத்தை மாற்றி அபாயா அணிவதற்கு தடை ஏற்பாடாதவகையிலான புதிய சுற்று நிருபத்தை வெளியிடவுள்ளதாகவும் அமைச்சர் மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி வெளியான சுற்றறிக்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe