ஆரம்பங்கள் பழமையாக்கப்பட்டு, வரலாறுகள் அஸ்தமானமாகும் துர்ப்பாக்கியம் நம்மவர்களிடம் காணப்படுகின்றமையை பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கின்றது. என்னதான் அரசியல், பொருளதார, சமூக மாற்றங்கள் விரிந்து சென்றாலும், கடமையில் கம்பீரமாயிருந்து ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை தேடித் தந்தவர்களை நினைவுகூறுதில் நாம் அனைவரும் முன்னுதாரணமாக திகழ வேண்டும்.
அதாவது, அண்மையில் இடம்பெற்ற (05/07/2019) நிகழ்வொன்றில் ஜனாதிபதி அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த மர்ஹ_ம் இஸ்மாயில் என்ஜினியர் பற்றி மெச்சுதலாகப் பேசியுள்ளார். இது ஒரு வராற்றுப் பதிவு என்பதையிட்டு இந்த ஊர் சார்பில் நாம் பெருமிதம் கொள்ளவேண்டும்.
மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசனத் திட்டங்களை நிர்மாணித்தவர்களை பாராட்டும் நிகழ்வில், உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
“ பராக்கிரம சமுத்திரம் பராக்கிரமபாகு மன்னனால் மூன்று குளங்களை இணைத்துக் கட்டப்பட்டது. 1930 களில் டீ.எஸ். சேனாநாயக்க இந்தக் குளத்தைத் திருத்தியமைப்பதற்குத் தீர்மானித்து, அந்தப் பொறுப்பை நீர்ப்பாசனப் பொறியியலாளரான இஸ்மாயில் எனும் முஸ்லிம் பொறியியலாளரிடம் ஒப்படைத்தார். இந்தத் தகவல் பொலன்னறுவ நீர்ப்பாசன அலுவலகத்தின் பதிவுப் புத்தகத்தில் உள்ளது.
உடைந்திருந்த பராக்கிரம சமுத்திரத்தை மீளவும் திருத்தியமைக்க முடியும் என பொறியியலாளர் இஸ்மாயில் டீ.எஸ். சேனாநாயக்கவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பணியைத் தொடர்வதற்கு அவர் அனுமதியளித்தார். இந்தப் பணியின் இறுதிக் கட்ட வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பொறியியலாளர் இஸ்மாயிலுடை குழந்தை கடுமையான சுகவீனமுற்றிருப்பதாக கொழும்பிலிருந்து தந்தி வந்திருந்தது. உடனடியாகப் புறப்பட்டு வருமாறு அவருடைய மனைவி அதில் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் வீட்டிலிருந்து தந்தி வருந்திருந்தது. குழந்தை இறந்து விட்டதாகவும், உடனே வீடு வரும் படியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் தனது பணியை முடித்து விட்டு குழந்தையின் இறுதிக் கிரியைக்காகத்தான் கொழும்புக்குப் போய்ச் சேர்ந்தார்.”
- இவ்வாறு உரையாற்றினார்.
இந்தக் கூற்று இஸ்மாயில் என்ஜியரின் சேவை, தியாகம், நேர்மை, கடமையுணர்வு, சமூக அக்கறை போன்ற பலதையும் வெளிக்காட்டுகின்றது.அவருடைய ஒவ்வொரு நகர்வும் கடமை, கட்டுப்பாடு, உண்மை, சத்தியம் இவைதான் அவருடைய வாழ்க்கையின் இரகசியம். செய்யும் தொழிலை ஒரு மனிதர் ஒரு வணக்கமாக நினைத்து அர்ப்பணிப்போடு செய்வாரேயானால் அவருடைய வாழ்க்கையில் ஒரு ஒளியை அவருக்கு கொடுக்கும் அப்பொழுதுதான் அந்த தொழில் மகிமை அடைகிறது.
வெறும் பணத்திற்காகவும், செல்வாக்குகளுக்காகவும் மட்டும் தொழில் செய்யக்கூடாது. ஆனால் மற்றவர்கள் பயன் பெறுவார்கள் அவர்களைத்தான் கர்மயோகி என்கின்றார்கள். இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் அவர் வாழ்க்கை அமைந்திருந்தது.
முன்னாள் அமைச்சர் எம்.ஏ. அப்துல் மஜீட் அவர்களின் மாமனார் ஆகிய இவர், தான் பொறியிலளாராக இருந்தபோது எமது மாவட்டம் மாத்திரமல்லாது முழு நாட்டுக்கும் எதிர்கால நலன் கருதி பல்வேறு திட்டங்களை வகுத்தவர் ஆவார்.
இஸ்மாயில் என்ஜியரின் தந்தை மீராலெவ்வை போடி வண்ணியனார். இவர் சம்மாந்துறைக்கு வந்த வேளையில்தான் முஸ்லிம்களிடம் முதன்முதல் அரச அதிகாரம் கிடைத்தது.
அவரின் வாரிசு இஸ்மாயில் என்ஜினியரின் சேவைக்காலங்களில் எத்தனையோ வாய்க்கால்கள், குளங்களுக்கான நிர்மாணிப்புக்கள் இடம்பெற்றுள்ளமையும் வராலாறு பேச வேண்டிய பொக்கிஷங்கள். அவர் நம் மத்தியில் இன்று இல்லாவிட்டாலும் அவரது சேவைகள், ஒழுக்கம், நற்பண்பு, கடமையுணர்வு போன்றன நாட்டின் ஜனாதிபதியே மெச்சும் அளவு பதியமிட்டுள்ளது.
இன்று எடுத்ததுக்கெல்லாம் பாராட்டு, எதை எதையோ எல்லாம் சாதித்தவர்கள் என பல்லாயிரம் பட்டங்கள் இப்படி ஏராளமான பெருமைகள் மார்புதட்டும் தருணங்களில், இவ்வாறான சேவைச் சிற்பங்களை நினைவு கூறுவதிலும் அசமந்தமாக இருந்துவிடக்கூடாது.
வராலாறு தெரிந்தவர்கள் ஊரின் பதியங்களை பருதிவட்டம் போல சுழல விடவேண்டும். அப்போதுதான் நவீன சமூகத்துக்கு அவை ஒரு முன்மாதிரியாக இருக்கும். எமது பல நூற்றுக் கணக்கான அமைப்பபுக்கள் இருந்தும் ஊரின் அழியாத வரலாறு பேசும் விடயங்களை தொகுப்பதற்கு தயாரில்லை.
சமூக அமைப்புக்கள் என்ற பேரில் கூடலும், உண்ணுதலும், கலைதலும் என்றுமாகவே உள்ளது. எமது ஊர் பாராட்டி நினைவு கூற வேண்டிய இப்படியான சேவைச் சிற்பங்களை ஜனாதிபதி பாராட்டி நினைவுகூறிய பின்னர்தான் எமக்கு ஞானம் வெளுக்கின்றது என்பதைச் சிந்திக்கும் போது உள்ளம் உருக்குலைகின்றது.
உண்மையிலே, இஸ்மாயில் என்ஜியரின் குடும்ப அரசியல் வாரிசாக தற்காலத்தில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நௌஷாத் கிளைவிட்டுள்ளமையும் ஒரு சான்றே. அப்படி அவர் இருந்தும் கூட இஸ்மாயில் என்ஜியரின் வரலாறு பேசப்பட்டதில்லை.
இதற்கு காரணம் இன்று வியாபித்துள்ள அரசியல் மாயையில் ‘வரலாறு பேசுபவனை வயோதிபர், இவர் அரசியலுக்கு தகுதி இல்லை’ எனும் நிலை ஊடுருவி விட்டது. வெறும் வெளிப்பகட்டுக்கும் சமூக ஏமாற்றங்களுக்கும், பித்தலாட்டலுக்கும் மட்டுமாகவே எமது பிரதேச அரசியல் சூடுபிடிக்கின்றன.
இஸ்மாயில் என்ஜியர் போன்ற எத்தனையோ பேர் இன்னும் நினைவுகூறப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அவ்வாறான ஒரு நடவடிக்கையினை சமூக அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மத நிறுவனங்கள் நிச்சயம் முன்னின்று செயற்படுத்த வேண்டும்.
✍️ கியாஸ் ஏ. புஹாரி