(றியாத் ஏ. மஜீத்)
பட்டதாரி மாணவர்கள் எதிர்காலத்தில் பட்டப் படிப்பின் பின்னர் அரச தொழிலை மட்டும் நம்பியிராது சுயதொழில் முயற்சியாளர்களாக மாற வேண்டுமென தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சடையின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சடையின் தவிசாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் கலந்து கொண்டு 20 பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
பத்தாயிரம் இளைஞர்களுக்கு விரைவில் மடி கணனிகள் வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றேன். இதற்கான அனுமதியினை அமைச்சர் றிசாட் பதியுதீன் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் இளைஞர்களை இன்று பெருகி வரும் ஒன்லைன் வியாபாரத்தின் பால் வழிகாட்டல்களை வழங்கி அதற்காக தொழில் உபகரணமான மடி கணணிகளை அவர்களுக்கு வழங்கி நவீன உலகின் போட்டிச் சந்தையில் கூடுதலான வருமானங்களை பெறக்கூடியவாறு திட்டங்களை வகுத்துள்ளோம்.
மேலும் நாடளாவிய ரீதியில் 2 லட்சம் சிறுகைத்தொழில் முயற்சிகளை தெரிவு செய்து ஒருவருக்கு தலா 1 லட்சம் ரூபா பெறுமதில் தொழில் உபகரணங்கள் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

