Ads Area

முஸ்லிம் பெண்களுடைய அரசியல் அந்தஸ்த்து பிற்போக்கான அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றது.

தலைமைத்துவ பண்புகளையும் அதற்கான ஆளுமையையும் வளர்த்துக்கொள்கின்ற நிலைமைக்கு முஸ்லிம் பெண்களை கொண்டுவருகின்ற விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பெண் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, இன்று அது புதிய பரிணாமத்தை எட்டியிருப்பதாவும் கூறினார்.

மாத்தளை, ஆமீனா மகளிர் தேசிய பாடசாலையின் மாணவ தலைவர் தின நிகழ்வு அதன் அதிபர் கலாநிதி பௌதீனா ஸமீக் தலைமையில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முஸ்லிம் பெண்களின் சமய, கலாசார ரீதியிலான ஆடை அணிகள் பற்றிய விடயத்தில் அண்மைக் காலமாக சர்ச்சைகள் உருவாகியுள்ளன. மத்திய கிழக்கு நாடுகளில் பெண்கள் அணியும் ஆடைகள் போன்று இங்கு எமது பெண்கள் அணிகின்ற போது அதற்காக பிரச்சினைப் படுகின்றவர்கள் முஸ்லிம் ஆண்கள் அணியும் மேற்கத்தேய பாணியிலான உடை விவகாரத்தை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. கலாசார ரீதியான விடயங்களை கையாள்கின்ற போது அவற்றில் எப்பொழுதுமே இவ்வாறான இரட்டை நிலைப்பாட்டைக் காண்கின்றோம்.

இஸ்லாம் ஆணாதிக்கவாதம் என்ற ஒன்றை அங்கீகரிக்கின்றதா என்பது இன்று ஒரு சர்ச்சையாக பரவலாக பேசப்படுகின்ற விடயமாக இருந்து வருகின்றது. அண்மைக்காலமாக இந்த சர்ச்சைக்குள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் சிக்கிக்கொண்டோம்.

நான் இங்கு வந்து அமர்ந்த போது, இந்த விடயம் தொடர்பில் இக் கல்லூரியின் அதிபரும் என்னோடு பேசினார். அண்மையில் கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற இஸ்லாமிய தின விழாவில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் நான் ஆற்றிய உரையை இணையத்தின் வழியாக அவர் கேட்டதாகவும் அதில் நான் தெரிவித்த முற்போக்கான கருத்துக்கள் தங்களுக்கு உற்சாகமூட்டுவதாகவும் சொன்னார்.

இங்கு அதிபர் கலாநிதி பௌதினா ஸமீக் உரையாற்றும் போது ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை பற்றியும் குறிப்பிட்டு அவர் சொன்ன விடயம் குறித்து எங்களது கவனத்தை ஆழமாக செலுத்தவேண்டிய அவசியம் இருக்கின்றது. அந்த தாக்குதலின் விளைவாக முழு நாடும் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. அந்த பயங்கரவாத சம்பவத்திற்குப் பிறகு முஸ்லிம் பெண்கள் தமது அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் தொடர்ச்சியான பிரச்சினைகளை அவர் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தை கேள்விக்குட்படுத்தி அவர்களை நோவிக்கின்ற வகையில் நாடாத்தப்பட்ட “நாடகம்” அவர்களது சுயவிருப்பிலான ஆடைதெரிவினை கேள்விக்குட்படுத்தியதோடு, மனதளவில் அவர்களை பாதிக்க செய்கின்ற விடயமாக அது இருந்தது. இதனால் தொழிலுக்குச் செல்கின்ற முஸ்லிம் பெண்கள் சிலர் தங்களது வேலையை கூட இராஜினாமா செய்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களால் அந்த மனஉளைச்சல்களை தாங்கிக்கிக்கொள்ள முடியவில்லை.

அடுத்த சமூகத்தினருக்கு எமது உரிமைகள் தொடர்பிலும் கலாச்சாரம் தொடர்பிலும் போதிய தெளிவை வழங்க வேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது.

குறிப்பிட்டளவு பெண்களும் பிரதிநிதிகளாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற சட்டதிருத்தம் வந்ததன் பயனாக எங்களது கட்சியில் 29 பெண் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் முஸ்லிம் அல்லாத சிங்கள தமிழ் பெண் உறுப்பினர்களும் அடங்குவர். இவ்வாறான சூழ்நிலையில் பெண்களின் தலைமைத்துவம் பற்றியும் நாம் பேசி வருகின்றோம்.

நாங்கள் வாழ்கின்ற சூழல் பல்லின மக்களை கொண்டது. அத்துடன், இந்த நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருக்கின்றோம்.

முஸ்லிம் பெண்களுடைய அரசியல் அந்தஸ்த்து குறித்த விவகாரத்தில் நாங்கள் எங்களுக்குள்ளே தேவையில்லாத ஒரு சர்ச்சையை உருவாக்கி கொண்டு வருகிறோம். அதிலும் இந்த காலகட்டத்தில் இவையெல்லாம் ஒரு பிற்போக்கான அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றது. உலமாக்கள் மத்தியிலும் இவ்வாறான விடயங்களில் வேறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவிவருகின்றன.

இந்த ஆமினா தேசிய பாடசாலையில் 56 மாணவியர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளமை மகிழ்ச்சிக்குரியது. உயர் கல்விக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் இலங்கை பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து நான் கவனம் செலுத்தியபோது அநேக பீடங்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருப்பதை கண்டேன்.

தலைமைத்துவ பண்புகளையும் அதற்கான ஆளுமையையும் வளர்த்துக்கொள்கின்ற நிலைமைக்கு எங்களது பெண்களை கொண்டுவருகின்ற விவகாரத்தில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் பெண்களை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பாத ஒரு காலமும் இருந்தது. ஏனென்றால், மதம் மாற்றிவிடுவார்கள் என்ற பயம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.

அறிஞர் சித்திலெப்பை போன்ற முன்னோடிகள் இதற்கு எதிராக போராடி படிப்படியாக பெண் கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டு, இன்று அது புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது. இந்த கட்டத்தில் நாங்கள் இந்த விவகாரங்களில் இருக்கின்ற சர்ச்சை சம்பந்தமாக ஆண், பெண் சமத்துவம் சம்பந்தமான விடயங்கள் அதாவது ஆணாதிக்க செயற்பாடுகள் என்று பார்க்கப்படுகின்ற விடயங்களை பொறுத்தவரை இவற்றில் அல்குர்ஆன் என்ன சொல்கிறது நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு முரண்படாத வகையில் சரியான கருது கோடல்களை ஏற்பாடு செய்வது அவசியமாகும். இது தொடர்பில் முன்னேற்றகரமான கருத்துக்களை முன்வைக்கின்ற உலமாக்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

சமூக நல்லிணக்கத்தை சார்ந்தது. சக சமயத்தவர்களின் ஒழுக்க மாண்புகளை பேணி சமய விழுமியங்களை அங்கீகரிக்கின்ற விடயங்களில் சில ஒத்துப்போகின்ற நிலைப்பாடுகளை நாம் வளர்த்துக்கொள்ள முன்வரவேண்டும்.

நவீன உலகில் இஸ்லாத்தின் அடிப்படை உஸ_ல்களுக்கு முரண்படாத விதத்தில் எமது சிந்தனை போக்கில் உரிய மாற்றம் அவசியமாகும். அல்குர்ஆன், அல் ஹதீஸ் ஆகியவற்றுக்கு மாற்றம் இல்லாத விதத்தில் கால, நேர சந்தர்ப்பங்களுக்கு உகந்ததாக உரிய வியாக்கியானம் பெறப்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மாத்தளை கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் ஜே.எம். இக்பால், பிரதேச கல்விப் பணிப்பாளர் பீ.பீ.மனோகர் ஆகியோரும் உரையாற்றினர்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe