Ads Area

கொழும்பு குப்பைகளால் புத்தளத்தில் சூழல் மாசு, பொதுமக்கள் முறைப்பாடு.

புத்தளம், அறுவைக்காடு பகுதியில் குப்பை கொட்டுவதால் சூழல் மாசடைவதாக தெரிவித்து கரைத்தீவு மற்றும் சேராக்குளி மக்கள் நேற்று (28) வண்ணாத்தவில்லு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். 

கடந்த இரண்டு வாரங்களாக கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் டிப்பர் வாகனங்கள் மூலம் புத்தளம் அறுவைக்காடு பகுதியில் கொட்டப்படுகின்றன. 

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால் சூழல் மாசடைவதாக தெரிவித்து சேரக்குளி மற்றும் கரைதீவு பகுதியைச் 200 இற்கும் மேற்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். 

எனினும், ஆரம்பத்தில் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள பொலிஸார் மறுப்பு தெரிவித்த போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. 

அதன் பின்னர் அங்கு வருகை தந்த வண்ணாத்திவில்லு பங்குத்தந்தை கிறிஸ்ட்ரி பெரேரா, வண்ணாத்தவில்லு பொலிஸாரிடம் மக்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக்௯றியதன் பின்னரே பொலிஸார் மக்களுடைய முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர். 

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை மிகவும் பாதுகாப்பான முறையில், புத்தளம் அருவக்காடு பகுதிக்கு எடுத்துச் சென்று, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீள்சுழற்சி செய்யப்பட்டு உரிய இடத்தில் கொட்டப்படும் என பொறுப்பான அமைச்சு அதிகாரிகள் தமக்கு வாக்குறுதிகளை வழங்கியதாக மக்கள் தெரிவித்தனர். 

எனினும், ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையும் மீறி பாதுகாப்பற்ற முறையில் குப்பைகளை கொண்டு வருவதுடன், எவ்வித சுழற்சி முறையும் இன்றி அருவக்காடு பகுதுயில் கொட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதனால் அறுவைக்காடு பகுதியை அண்மித்து வாழும் சிறுவர், முதியோர்கள் உட்பட அனைவரும் அசுத்தமான துர்நாற்றத்தை சுவாதிப்பதுடன் பல அசௌகரியங்களையும் எதிர்நோக்குவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, கற்பிட்டி பிரதேசத்திலும் வெள்ளிக்கிழமை அறுவைக்காடு குப்பையின் துர்நாற்றம் வீசியதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். 

வெள்ளிக்கிழமை முழு நாளும் இவ்வாறு குப்பைகளின் அசுத்தமான துர்நாற்றம் வீசியதால் தலைச்சுற்றுடன் பலர் வாந்தியெடுத்ததாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

(புத்தளம் நிருபர் ரஸ்மின்)
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe