டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் இலங்கையிலும் மிக வேகமாக பரவி வருகிறது. பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ்களால் உருவாகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ்கள் நான்கு வகைகளை உடையது. டென்வி-1, டென்வி-2, டென்வி-3 மற்றும் டென்வி-4 வகை வைரஸ்கள் மனிதனை தாக்கி டெங்கு காய்ச்சலை உருவாக்கும். இந்த வைரஸ் கிருமிகள் ஏடிஸ் வகை கொசுக்கள் பலவற்றினால் பரப்பப்படும். குறிப்பாக ஏடிஸ் ஈஸிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.
நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் 20 சதவீதத்தினர்களுக்கு நோய் அறிகுறியான, அதிவிரைவு காய்ச்சல், கண்ணிற்கு பின்னால் வலி, தசை வலி மற்றும் தோலில் தடிப்புகள் உருவாகும். நோய் உடலில் தங்கும் நேரத்தை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவம், அபாயகரமான பருவம் மற்றும் மீழும் பருவம் என பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பருவத்தில் பயங்கர காய்ச்சலோடு ஆரம்பிக்கும் நோயானது அதிகபடியான உடல் வலியையும், தலைவலியையும் குறைந்தது 2 முதல் 7 நாட்களுக்கு கொடுக்கும். இந்த நேரத்தில் 50 முதல் 80 சதவீத நோயாளிகளுக்கு தோல் தடித்து பின் தோலில் ஏற்படும் தடிப்புகள்போல் உருவாகும். சிலருக்கு லேசான ரத்தப்போக்கு வாயிலும், மூக்கிலும் ஏற்படலாம்.
சில நேரங்களில் ரத்த நாளங்களில் அதிகப்படியான நீர்சேர்க்கை உருவாகும். இதனால் மூளை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் 67 சதவீத சுயநினைவிழப்பு ஏற்படும். இதை தொடர்ந்து இதய தொற்றுகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். இவ்வாறாக இந்நோய் பாதிப்புகள் இரண்டு வகையான பாதிப்பை உருவாக்கும் ஒன்று மரணத்தை ஏற்படுத்தும் டெங்கு ஹெமரோஜிக் காய்ச்சல். இவை அதிக ரத்தப் போக்கையும், ரத்த தட்டையணுக்களையும், ரத்தத் திரவங்களையும் குறைவுபடச் செய்யும். இரண்டாம் வகை டெங்கு, ஷாக் அறிகுறியை உருவாக்கி இதயத்துடிப்பை வெகுவாக குறைத்து அபாயக் கட்டத்தை அடையச் செய்யும்.
டெங்கு வைரஸ்களை தாங்கி வரும் ஏடிஸ் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்கும்போது அதன் எச்சிலோடு வைரஸ் கிருமிகள் மனித தோல்களுக்குள் உட்புகும். இந்த வைரஸ் கிருமிகள் பின்னர் தந்திரமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ரத்த வெள்ளை அணுவுக்குள் நுழைந்து, தன் இனத்தை பெருக்கிக் கொண்டு உடலில் உலாவரும். இந்த ரத்த வெள்ளையணுக்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் தன்னுள் இருக்கும் வைரஸ் கிருமிகளை அழிப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கும்.
பகல் நேரங்களில் கடிக்கும் தன்மையுடைய இக்கொசுக்கள் ஒரு கடி மூலம் நோய்களை உருவாக்கும் சக்தியுடையது. பெண் கொசுக்கள் நோய் தாக்கிய மனிதர்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சும்போது வைரஸ் கிருமிகள் கொசுவின் உடலுக்குள் செல்கின்றன. பின் கொசுக்களின் குடல் சுவரில் 8 முதல் 10 நாள்கள் ஒட்டிக் கொண்டிருக்கும், பின்னர் கொசுக்களின் பிற உடல் உறுப்புகளுக்குள் செல்லும், பின்னர் கொசுவின் எச்சில் வழியாக வெளிப்பட்டு பிறரை கடிக்கும்போது அந்த மனிதர்களுக்குள் செல்லும். இந்த வைரஸ் கொசுக்களுக்கு எந்த பிரச்சினைகளையும் உருவாக்காது. டெங்கு கொசுக்கள் மனிதர்கள் வாழும் பகுதிகளின் மிக அருகிலுள்ள நல்ல தண்ணீர்தேக்கங்களில் முட்டையிட்டு குஞ்சுபொரிக்கும்.
இந்நோயை கண்டறிவது எளிதான காரியமில்லை, சாதாரணமாக வெள்ளையணுக்கள் எண்ணிக்கை, தட்டையணுக்கள் எண்ணிக்கையை வைத்து டெங்கு காய்ச்சலைக் கண்டறிவது சரியான வழிமுறையில்லை. ஏனென்றால், பல நோய்களுக்கு இவற்றின் எண்ணிக்கை குறைவுபடலாம். டெங்கு காய்ச்சலை சரியாக கண்டறிய, உடலிலுள்ள வைரஸ்களை வளர்த்தெடுக்கும் முறையையோ, வைரஸ் பி.என்.ஏ. மூலக்கூறுகளைக் கண்டறியும் பி.சி.ஆர் முறையையோ, வைரஸ் புரதங்களைக் கண்டறியும் முறையையோ அல்லது வைரஸ் நோய்களின் தொற்றுகளால் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் முறையையோ பயன்படுத்தலாம்.
முனைவர் எஸ்.பிரகாஷ்,
நுண்ணுயிரியல்துறை,
தனியார்கல்லூரி, சேலம்.

