ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும் - பா.உ.மன்சூர்.
முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.வி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும். ஜே.வி.பி. வேட்பாளர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. சமூகத்துக்காக குரல்கொடுத்து பேசினார்கள் என்பதற்காக வெற்றிபெறாத ஒருவருக்கு வாக்களித்து உங்களது வாக்குளை வீணாக்கவேண்டாம்.என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நேற்றுமுன்தினம் (26) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே - ஜே.வி.பி. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெகுதூரம் தள்ளி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. வெற்றி பெறுவது ஒருபோதும் சாத்தியமில்லை. இந்நிலையில் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்கவுக்கு தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாக்களிப்பது சஜித் பிரேமதாசவின் வெற்றி வாய்ப்பினை குறைத்து, கோத்தாபாயவை வெற்றிபெற வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விசமப் பிரசாரங்களை மேற்கொண்ட இனவாதக் கும்பல்கள் இப்போது மொட்டு அணியின் பக்கம் சங்கமித்திருக்கின்றன. முஸ்லிம்களின் உரிமைகளில் கைவைப்பதற்கு எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு வந்துள்ளனர். சுயகெளரவமுள்ள நாங்கள் இந்த அணியை முற்றாக நிராகரிக்க வேண்டும்.
சிறுபான்மை சமூகங்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் சஜித் பிரேமதாசவை தவிர வேறொரு தெரிவு இருக்க முடியாது. எனவே, சஜித்தை வெற்றிபெற வைக்க அனைவரும் பாடுபட வேண்டும். கோத்தாபாய வெற்றி பெற்றால் நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.என்றார்.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.நஸீர், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர், ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி, பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

