Ads Area

சாய்ந்தமருது குழுவினரின் மஹிந்தவுடனான சந்திப்பை விமர்சிப்பதை விடுத்து அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டும்.

சாய்ந்தமருது குழுவினரின் மஹிந்தவுடனான சந்திப்பை விமர்சிப்பதை விடுத்து அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டும்.

சாய்ந்தமருது சுயேற்சை உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற செயற்பாட்டாளர்களும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (21.10.2019) சந்தித்து உரையாடியதை வைத்து பலர் விமர்சனம் செய்கின்றனர்.ஆனால், இதன் பின்னணி குறித்து சற்று ஆராயவும் வேண்டும்.

அதாவது, சபைக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்களை அரசியல் செய்வதற்கு வலிந்து தள்ளிவிட்டவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் சந்தர்ப்பவாத கட்சிகளை புறக்கணித்து தேசியக் கட்சிகளிடம் குறித்த கோரிக்கையை நேரடியாக முன்வைத்து அதனை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கம் இங்கு இருக்கின்றதேயொழிய இதில் யாரும் அரசியல் செய்வதற்கல்ல என்பதை தெளிவாக விளங்க வேண்டும்.

இவர்கள் சந்தித்ததன் ஊடாக சாய்ந்தமருது மக்கள் அனைவரும் இந்த தரப்புக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று எந்த பிரகணடத்தையும் வெளியிடவில்லையே. மாறாக சந்திப்பின் பேசப்பட்ட விடயங்களை வைத்து அவர்களால் வழங்கப்பட்ட செய்தியை மக்களுக்கு சொல்லியிருக்கின்றார்கள்.

ஆனால், குறித்த சந்திப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட குரல் பதிவிலே 'எமது மக்களிடம் கலந்தாலோசித்து ஒரு முடிவினை எடுப்போம்' என்று அவர்களால் சொல்லப்பட்ட விடயத்தை விமர்சனம் செய்வோர் ஏன் கருத்திற் கொள்ளவில்லை.

உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையினை வென்றெடுப்பதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தலையும் சந்தப்பமாக பயன்படுத்த சாய்ந்தமருது தரப்பினர் முனைந்திருப்பதை சாதகமான விடயமாகப் பார்க்க வேண்டாமா.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கல்முனைப் பிரதேசத்திற்கு வருகை தரும்போது இது விடயத்தில் ஒரு உறுதியான செய்தியை கூறுவதாக சொல்லப்பட்டது. அவரது செய்தி நம்பகத்தன்மை உடையதாக தென்பட்டால் அவரது தரப்புக்குமக்கள் வாக்களிக்கட்டும். 

அது மாத்திரமன்றி இந்த சந்திப்பானது சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் எதிர் அரசியல் செய்வோருக்கு சுயநல அரசியல் இலாபங்களுக்காக சாய்ந்தமருது மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்ற ஒரு அபாய எச்சரிக்கையையும் சொல்லியிருக்கின்றது. 

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டுமேயொழிய யாரும் வற்புறுத்தல் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. 

இதற்கு சிறந்த உதாரணமே, கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சாய்ந்தமருது சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கான மக்கள் ஆணையை சுயேற்சை குழுவிற்கு வாக்களிப்பதனூடாக வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டபோதும் 2500க்கு மேற்பட்ட வாக்குகள் வேறு கட்சிகளுக்கு அளிக்கப்பட்டது. சாய்ந்தமருது பிரகடணத்தை ஜனநாயக மீறல் என விமர்சித்தோருக்கு சாய்ந்தமருது மக்களின் ஜனநாயகம் எவ்வாறு பேணப்பட்டிக்கின்றது என்பதற்கு மேற்படி தேர்தல் முடிவு தகுந்த பதிலை வழங்கும்.

இந்த சந்திப்பை வைத்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற போராட்டதில் ஈடுபட்ட பலர் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்துவது நியாயமானதே. இதன் யதார்த்தங்கள் வெளிவரும்போது நாமே அதை பாராட்டும் நிலையேற்படாம் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.

ஆனால், நவம்பர் எழுச்சி, சாய்ந்தமருது பிரகடணம், தனியான சுயேற்சையில் தேர்தலில் போட்டியிட்டது உட்பட சாய்ந்தமருது மக்களின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தி ஏளனமாக விமர்சித்தோரே இது தொடர்பில் வேண்டாத விமர்சனங்களைச் செய்து வருகின்றனர்.

இவ்வாறானவர்களுக்கு எம்மையும் எமது நடவடிக்கைகளையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்பதையும் கூறிவைக்க விரும்புகிறேன்.

எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe