Ads Area

தற்கொலை செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்க சம்மாந்துறை வைத்தியசாலையில் விழிப்புணர்வு ஊர்வலம்.

(எம்.எம்.ஜபீர்)

தற்கொலை செய்வதிலிருந்து மக்களை பாதுகாக்க சம்மாந்துறை வைத்தியசாலையில் விழிப்புணர்வு ஊர்வலம்.

சர்வதேச உளநல தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு  ஏற்பாடு செய்த தற்கொலைகளை தடுப்போம் என்ற தொனிப்பொருளிலான விழிப்பூட்டல் நடைபவனி அண்மையில் சம்மாந்துறையில் இடம்பெற்றது.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையுடன் சம்மாந்துறை பிரதேச செயலகம், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பொலிஸ் நிலையம், சம்மாந்துறை சமூகப் பணியாளர்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

சம்மாந்துறை வைத்தியசாலையில் முன்பாக ஆரம்பமாகிய விழிப்பூட்டல் நடைபவனி அம்பாரை கல்முனை பிரதான வீதி, பொலிஸ் வீதி, சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியூடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தது.

இதன்போது தற்கொலையின் அறிகுறிகள், நாட்டில் 40 நொடிகளில் ஒரு தற்கொலை, தற்கொலை வீதம், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சுலோகங்களை தாங்கியவாறு நடைபவணியில் ஈடுபட்டதுடன், பிரதேச மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.ஆஷிக், ஆதார வைத்தியசாலை உளநல பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் ஆர்.குருபரன், அம்பாரை மாவட்ட போதைப்பொருள் தகவல் அதிகாரி வீ.எம்.றஷாட், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை சமூக பணியாளர்கள், லயன் கழகம், சமூக தொண்டு அமைப்புகள், வைத்தியர்கள், இளைஞர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe