Ads Area

மலரும் மொட்டு ஆட்சியில் கிழக்கில்இருந்து நான்கு தமிழ் அமைச்சர்கள் – காரைதீவில் பசில் உறுதி.

கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு மொட்டு அரசாங்கத்தின் வரப்பிரசாதமாக நான்கு தமிழ் அமைச்சர்கள் தரப்படுவார்கள் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை வகுப்பாளரும், பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவை ஆதரித்து காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பேசியபோது பசில் ராஜபக்ஸ மேலும் தெரிவித்தவை வருமாறு:-

சகலரும் சம உரிமைகளுடனும் வாழ கூடிய இன, மத பேதம் அற்ற ஆட்சியை நாம் இந்த நாட்டில் கொண்டு வருவோம். எமது கடந்த அரசாங்கங்களில் கிழக்கு மாகாணத்தில் இருந்து இரண்டு தமிழ் எம்.பிகள் அங்கம் வகித்தார்கள். ஆனால் எமது புதிய அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து நான்கு தமிழ் அமைச்சர்கள் இருப்பார்கள்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் உங்கள் பிரதேசங்களில் இடம்பெற்ற அபிவிருத்திகள் குறித்து உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அனைத்து வசதிகளும் உங்களுக்கு ஏற்படுத்தி தரப்பட்டன. இளையோர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் மஹிந்த அரசாங்கத்தை விட சிறந்த முறையில் செயற்பட கூடிய அரசாங்கம் வரும் என்று நினைத்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை தோல்வி அடைய செய்தீர்கள்.

ஆனால் அதன் பின் என்ன நடந்தது? விவசாயிகளுக்கான உர மானியம் நிறுத்தப்பட்டது. நீர்ப்பாசன வசதிகளும் இல்லாமல் செய்யப்பட்டன. விவசாயிகளின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அபிவிருத்தி வேலை திட்டங்கள் அனைத்தும்கூட நிறுத்தப்பட்டன. இந்நிலைமைகளை மாற்றி அமைக்க உங்களுக்கு தற்போது மிக நல்ல சந்தர்ப்பம் கிடைத்து இருக்கின்றது. நீங்கள் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து கோதாபய ராஜபக்ஸவை வெற்றி பெற செய்யுங்கள்.

அதன் பின் அவரின் தலைமையிலான புதிய அரசாங்கத்தை நாம் அமைப்போம். கிழக்கு மாகாணத்தில்  அநேகமான பட்டதாரிகளும், படித்த இளையோர், யுவதிகளும் வேலை வாய்ப்பு இன்றி இருக்கின்றனர். எமது அரசாங்கம் அமைக்கப்பட்டதும் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் நிச்சயம் வழங்கப்படும். தற்போது ஒரு இலட்சத்துக்கும் கூடுதலான பதவி வெற்றிடங்கள் அரசாங்க தொழில் துறைகளில் உள்ளன.அவற்றுக்கு அவர்களை நியமிப்போம்.

மேலும் இன்று எத்தனையோ குடும்ப பெண்கள் எதுவித வாழ்வாதாரங்களும் இன்றி குடும்பத்தை தனியாக சுமந்து கொண்டு கடன் சுமையில் தத்தளிக்கின்றனர். அவர்களின் மன வேதனைகள் எமக்கு நன்கு தெரியும் அவ்வாறானவர்களுக்கான நிவாரண திட்டம் ஒன்றை நாங்கள் கொண்டு வருவோம். அத்தோடு தற்போது சோபை இழந்து மங்கி காணப்படுகின்ற எமது இலன்கை திருநாட்டையும் மீள கட்டியமைத்து செழுமை அடைய செய்ய எம்மால் மாத்திரமே முடியும். –

கிருஷ்ணமூர்த்தி தலைமை உரை ஆற்றியபோது வருகின்ற ஜனாதிபதி தேர்தல் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை பொறுத்த வரை சுய இலாப முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களுக்கும் இடையிலான தேர்தலே ஆகும், சுய இலாப முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் அதிகாரங்கள் மூலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு காலம் காலமாக செய்து வருகின்ற அநியாயங்கள் ஏராளமானவை, அவை அண்மைய காலங்களில் உச்சத்தை தொட்டு இருக்கின்றன, அவர்கள் ஆதரிக்கின்ற சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்றால் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் உரிமை, இருப்பு, பாதுகாப்பு, அபிவிருத்தி ஆகியன ஒரேயடியாக அழிக்கப்பட்டு விடுகின்ற பேராபத்து கண்கள் முன் தெரிகின்றது, ஆகவே அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் எக்காரணம் கொண்டு சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்க முடியாது, கோதாபய ராஜபக்ஸவின் மொட்டு சின்னத்துக்கே தவறாமல் வாக்களிக்க வேண்டும், கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி தர முடியாதவர்கள் அம்பாறை மாவட்டத்தில் மூன்று தமிழ் பிரதேச செயலகங்களை உருவாக்கி தர போவதாக கதை அளக்கின்றார்கள் என்றார்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe