(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஆதம்பாவா ஜஹ்பர், பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவர் 1997ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார். பின்னர் உரிய காலங்களில் பதவி உயர்வுகளைப் பெற்று தற்போது பேராசிரியராக தரமுயர்த்தப்பட்டுள்ளார். 2017.12.05 ஆம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நியமானம் வழங்கப்பட்டிருக்கிறது.
இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வர்த்தகத் துறையில் சிறப்பு பட்டத்தினை [B.Com (Hons)] இரண்டாம் வகுப்பு உயர் பிரிவில் 1997 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார். பின்னர் இலங்கை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுமானி (M.Sc in Management) பட்டத்தை பெற்றுக் கொண்டார்.
மேலும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்ற வியாபார நிர்வாக முதுமாணிப் (Master of Business Administration) பட்டத்தை வழங்குவதற்கான பட்டப்பின்படிப்பு நிலையத்தினை (Postgraduate Unit) இவரே 2011ஆம் ஆண்டு ஆரம்பித்து வைத்ததுடன் அந்தப் பிரிவின் முதலாவது இணைப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்து, அதன் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தரநிர்ணய பிரிவின் தலைவராகவும் செயற்பட்டு பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான அபிவிருத்திக்கு தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இந்தியாவின் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சுதேச முகாமைத்துவ மகாநாட்டில் (International Conference on Indigenous Management) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வழங்கினார். இவ்வாய்வுக் கட்டுரையானது சிறந்த ஆய்வுக் கட்டுரை என்ற விருதையும் அதற்கான முதலாம் தர பணப்பரிசினையும் (Best Paper award with first cash prize) இந்தியாவில் பெற்றுக் கொண்டு இலங்கைக்கும் நமது சமூகத்துக்கும் நற்பெயரை பெற்றுக் கொடுத்தார்.
பல்வேறு சிறப்பு பெற்ற தேசிய, சர்வதேசிய கல்விசார், ஆய்வுச் சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு மாநாடுகளில் பதிப்பாசிரியராகவும் சபை உறுப்பினராகவும் தனது பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். சர்வதேச ஆய்வு மாநாடுகளின் தலைவராகவும் (Chairman) ஆய்வுக்கட்டுரைகளை முன்னாய்வு செய்பவராகவும் (Reviewer) கல்வியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியுள்ளார்.
மேலும் இந்திய அரசாங்கத்தின் மனித அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பெங்களூரில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி நிகழ்ச்சித்திட்டத்தின் வளவாளராகவும், இந்தியாவின் புனே நகரில் இடம்பெற்ற சர்வதேச ஆய்வு மாநாட்டின் (The International Conference on Vision India 2030 organized by Abeda Inamdar Senior College of Arts, Science and Commerce, Pune, India) சேவையாற்றியுள்ளார்.
பேராசிரியர் அவர்கள் நாட்டின் கல்வித்துறை அபிவிருத்திக்காக பல்வேறு கோணங்களிலும் தனது அர்ப்பணிப்பினை வழங்கியுள்ளார். அவற்றினுள் குறிப்பிடத்தக்கதாக இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களினது தலைவராக, அதன் உறுப்பினராக தனது சேவையினை அனைத்து பல்கலைக்கழககங்களுக்கும் நமது நாட்டிற்கும் வழங்கியுள்ளார்.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மற்றும் சாய்ந்தமருது ரியாளுள் ஜன்னா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மணவரான பேராசிரியர் ஜஹ்பர் அவர்கள், சாய்ந்தமருது-10 ஆம் பிரிவைச் சேர்ந்த கலந்தர் ஆதம்பாவா, கதீஜா உம்மா தம்பதியினரின் புதல்வரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆதம்பாவா அப்துல் அஸீஸ் அவர்களின் சகோதரருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.