திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமில்லை - உயர்நீதிமன்றம்.
கோயம்புத்தூரில் ஒரு தனியார் தங்கும் விடுதி ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இந்த தனியார் விடுதியில் ஒரு அறையில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததாலும், மற்றொரு அறையில் மதுபான பாட்டில்கள் இருந்ததாலும் இந்த விடுதிக்கு போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இந்த விடுதியில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கி இருந்ததாகவும், மது விற்பனைக்கான உரிமம் பெறாத நிலையில் வேறொரு அறையில் மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதாலேயே சீல் வைத்ததாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
காவல்துறையினரின் இந்த விளக்கத்தை ஏற்காத நீதிபதி, திருமணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் ஒன்றும் இல்லாத நிலையில், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பினார்.
அத்துடன் இந்த விடுதியின் அறையில் மதுபாட்டில்கள் கிடைத்ததால் மட்டும் இவர்கள் மது விற்பனை செய்கிறார்கள் என்று கூறி விட முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்- 4.5 லிட்டர், வெளிநாட்டு மதுபானம்- 4.5 லிட்டர், பீர் - 7.8 லிட்டர், 9 -லிட்டர் ஒயின் என வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளதை சுட்டிக்காட்டி விடுதியில் மதுபான பாட்டில்கள் இருந்தது குற்றமில்லை எனவும் தெளிவுபடுத்தினார்.