ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத முகம் வெளிப்படுகிறதா.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார தனது முகநூல் பக்கத்தில் சாய்ந்தமருது நகரசபை பிரகடணத்தை விமர்சனத்திற்குள்ளாக்கும் விதமான "அனைவரது அவதானத்திற்குமாக" என்ற தலைப்பிலான பதிவொன்றை இட்டுள்ளார். (ஸ்கிறீன் சொட் மற்றும் பதிவின் லிங்க் இத்துடன் https://www.facebook.com/963749206973515/posts/3329356927079386/
இணைக்கப்பட்டுள்ளது).
அந்த பதிவில், சாய்ந்மருதிலிருந்து கல்முனை மாநகர சபைக்குச் செல்லும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக குறைந்த அளவு நேரத்திற்குள் செல்லக்கூடிய இடத்தில் மாநரக சபை அமைந்திருக்கையில் சாய்ந்தமருதுக்கு சபை வழங்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தை மக்களிடத்தில் விதைக்கும் பாங்கில் அவரது பதிவை நோக்கவும் முடியும்.
நளின் பண்டாரவின் இந்தக் கருத்தை பதிவிடுவதற்கு முன்னர், அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் 2015ம் ஆண்டைய பொதுத் தேர்தலுக்காக கல்முனையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை தருவதாக கூறியமை தொடர்பில் வினவியிருக்க வேண்டும்.
இந்த நளின் பண்டாரவும் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கை பற்றி அறிந்திருந்தார் என்பதை விளக்கும் பதிவே இது. 2018 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமை சந்திக்க சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிருவாகிகள், சுயேற்சைக்குழு சார்பான மாநகர சபை உறுப்பினர்கள் அத்துடன் நகர சபை செயற்பாட்டாளர்கள் அடங்கிய குழுவொன்று கொழும்பு சென்றிருந்தது.
அதில் நானும் சென்றிருந்தேன். ஹக்கீமுடன் சாய்ந்தமருது தரப்பு மேற்கொண்ட இறுதி சந்திப்பிற்கு முந்திய சந்திப்பு இதுவாகும். அன்றைய நாள் காலை றஊப் ஹக்கீமை உயர்கல்வி அமைச்சில் சந்தித்து பேசியபோது, அவரது பதில் எமது குழுவினருக்கு திருப்தியளிக்காமையின் காரணமாக அன்று பின்நேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம அவர்களை அவரது அமைச்சில் சந்திக்க திட்டமிட்டப்பட்டது.
குறித்த சந்திப்பு அவரது அமைச்சில் நடைபெற்றபோது, மேற்படி ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவும் மலிக் சமரவிக்கிரமவுடன் கலந்து கொண்டார்.
சாய்ந்தமருதுக்கு ஏன் தனியாக உள்ளுராட்சி மன்றம் கோரப்படுகின்றது என்பதற்கான நியாயங்களை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். அவற்றை செவிமத்த இருவரும் இது குறித்து தங்களாலான முயற்சிகளைச் செய்து சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விடயத்தில் உதவி செய்வதாக எமது குழுவினருக்கு பதிலளித்திருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலின்போது அவர் ஆதரவு வழங்கிய வேட்பாளர் சஜித் பிரேமாதாஸ சாய்ந்தமருதுக்கு தீர்வு பெற்றுத் தருவதாக (சாய்ந்தமருதுவட சாதாரண கரணவா) என்று கூறும்போது வாய் திறக்காத நளின் பண்டார, இப்போது கருத்து வெளியிடுவதனூடாக அவரது சுயரூபம் எப்படிப்பட்டது என்பது வெளிப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் 2015ம் ஆண்டைய தேர்தலுக்கு கல்முனைக்கு வந்து வாக்குறுதி தந்து ஆட்சி அமைத்ததிலிருந்து, கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரகடணப்படுத்தப்படும்வரை சாய்ந்தமருதுக்கு நகரசபை வழங்காது இழுத்தடித்த குறுகிய சிந்தனையாளர்களைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் பெயர்தாங்கி அரசியல் டீலர்களும் அவர்களது ஊதுகுழல்களும் சாய்ந்தமருது விடயத்தை அரசியலாக்க அக்கட்சி சார்ந்தோர் முன்னெடுக்கும் பிரச்சாரங்களைக் கண்டு வெட்கி தலைகுணிய வேண்டும்.
எல்லோராலும், ஏற்றுக் கொள்ளப்பட்ட சாய்ந்தமருதுக்கான நகரசபை வழங்கப்பட்டதையே விமர்சனத்திற்குள்ளாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினூடாக முஸ்லிம்களுக்கு ஏதாவது நன்மை கிட்டுமா என்று ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நளின் பண்டார போன்றோர் கைகோர்த்து இருக்கின்ற சஜித் பிரேமதாஸ தரப்பானது, சஜித்தை பிரதமராக்கி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நல்லது நடக்கும் என்று யாராவது சிந்திப்பார்களின் அவர்களது அறிவீனத்தின் வெளிப்பாடாவே அது அமையும்.
எம்.ஐ.சர்ஜூன்
சாய்ந்தமருது.