வெறும் பானைக்குள் புரியாணி தேடும் படலத்தை அண்மைய ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எமது முஸ்லிம் அரசியல் கட்சிகள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவது கவலையான ஒரு விடயம். கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைகள் தீர்மானம் எடுக்க முன்னர் அனுபவம் குறைந்த சில இளவயது பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து முந்திரிய விதை போன்று முந்திக்கொண்டு வந்து சந்தைப்படுத்தி இறுதியில் படுதோல்வியடைந்த விரக்தியில் இருந்து இன்னும் மீண்டுவராத இவர்கள் இப்போது புதிய கோஷத்துடன் மீண்டும் மக்களை மடையர்களாக்க வந்துள்ளார்கள் என தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைப்பரப்பு இணைப்பாளர் யூ.எல்.என். ஹுதா தெரிவித்தார்.
மாளிகைக்காடு பிரதேசத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது உரையில் மேலும்,
14 இலட்சம் மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்று இந்த நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ அவர்கள் இருக்க, திட்டமிடலில் தனக்கு நிகராக தானே இருக்கும் பசில் ராஜபக்ச இருக்க, அரசியல் காய் நகர்த்தல்களில் முதிர்ச்சியான நிலையில் இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருக்க, இப்போது புதிய கோஷமாக சஜித்தை பிரதமராக்குவோம் என்றும் எங்களது உதவி இல்லாமல் ஆட்சியைக்க முடியாது என்றும் சிங்கள மக்களை சூடாக்கும் பேச்சுக்களை தொடர்ந்தும் எமது அரசியல் தலைமைகள் செய்துவருவதை சமீபத்தைய அறிக்கைகளில் காணும் போது இவர்களின் முட்டாள்தனங்களின் உச்சத்தை அறியலாம்.
இவர்களது விஷம, இனவாத பிரச்சாரங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் மொட்டுக்கு வழங்கிய வாக்குகளை விட அதிகமாக மேலும் அதிகரிக்க செய்யும் என்பதுடன் அரசை பலமானதாக உருவாக்க வழிசமைக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்களில்லை. இவர்களது விஷம பிரச்சாரங்களை நம்பி இவர்களின் பின்னால் சென்றால் மக்கள் நடுத்தெருவில் நிற்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். பாடலுக்கும், செப்பு பித்தளைக்கும், பிளாஸ்டிக் பொருட்களுக்கும் வாக்களிக்கும் நிலையிலிருந்து மக்கள் விடுபட்டு தமது எதிர்கால சந்ததியின் நிலையானதும் நிம்மதியானதுமான வாழ்க்கைக்கு தமது வாக்குகளை சிந்தித்து வழங்க வேண்டும்.