Ads Area

காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் பிரத்தியோக வகுப்புக்கள் நடாத்தத் தடை..! மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை..!

நூருள் ஹுதா உமர். 

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகள் மூடப்படும் காலப்பகுதியில் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் முன்பள்ளிப் பாடசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக நாட்டிலுள்ள அரச பாடசாலைகளை ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசு தீர்மானித்துள்ள நிலையில், இக்காலப்பகுதியில் மாணவர்களின் நலன் கருதி தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சினால் எமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

இதன் பிரகாரம் காரைதீவு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேசங்களில் பிரதேச சபையின் வர்த்தக அனுமதிப்பத்திரம் பெற்று,பெறாது இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் முன்பள்ளிப் பாடசாலைகளையும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடுமாறு அவற்றின் நடத்துனர்களை அறிவுறுத்துகின்றேன் என்றார்.

இந்த அறிவுறுத்தலை மீறி, யாராவது வகுப்புகளை நடத்தினால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு களம் அமைத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

இக்காலப்பகுதியில் தனியார் கல்வி நிலையங்களை கண்காணித்து, பரிசோதிப்பதற்காக எமது பிரதேச சபையின் உத்தியோகத்தர்களையும் பொலிஸாரையும் இணைத்து குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

இப்பரிசோதனை நடவடிக்கைகளின்போது தனியார் வகுப்புகள் நடத்துவது கண்டறியப்பட்டால் குறித்த தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்  என்பதை கவலையுடன் அறியத்தருகின்றேன்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe