ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்களின் சுரப்பு குறைவதுதான் பெண்களின் எடை அதிகரிப்பதற்கான முதல் காரணம். மெனோபாஸ் காலம்வரை ஒரு பெண் எடையை தாங்கும் எந்தப் பயிற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தால், அவருக்கு தசைத் திசுக்கள் குறைவாக இருக்கும்.
அதாவது அவை கலோரிகளை எரிக்கும் ஆற்றலை இழந்திருக்கும். அதனால், அவர்களது எடை அதிகரிக்கும் என்கிறது, மருத்துவ ஆய்வு ஒன்று. மேலும் இளவயதில் பெண்களைவிட ஆண்களுக்கே தசைத்திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும். பெண்கள் தசைத்திசு அடர்த்தியை அதிகரிக்கும் முயற்சிகளை செய்வதில்லை. அதன் விளைவு அவர்களது மெனோபாஸ் பருவத்தில் பிரதிபலிக்கும். தசைத்திசுக்கள் அடர்த்தியின்றி இருந்தால் எலும்புமுறிவு ஏற்படும் அபாயமும் அதிகம். எனவே விளையாட்டு துறை சார்ந்த பிசியோதெரபிஸ்ட்களை சந்தித்து, தசைத்திசுக்களின் அடர்த்தியை அதிகரிக்கும் வழிகளை கேட்டுப் பின்பற்றலாம். புரதம் அதிகமுள்ள உணவுகளும் இதற்கு உதவும்.
உணவை அளந்து சாப்பிடுங்கள். அதற்கென அளவு கப்புகள் அல்லது எடை மெஷின் பயன்படுத்துங்கள். 2 கப் காய்கறியுடன், ஒரு கப் பருப்பு சாப்பிடுங்கள். குறைந்த ஸ்டார்ச் சத்துள்ள காய்கறிகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மஞ்சள் பூசணி, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதை தவிருங்கள். ஒரு நாளைக்கு 2 முதல் 3 டீஸ்பூனுக்கு மேல் எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். பாதாம், வால்நட், ஆளிவிதை போன்றவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு கிடைக்கும்.
முழு தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி அவல் போன்றவற்றை உணவுக்குப் பிறகும் தொடரும் பசியின் போது சாப்பிடலாம். மைதா, பொரித்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்த்த உணவுகள், கிரீம் சேர்த்த உணவுகள், துரித உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தாலே உடல் பருமனாகும் வாய்ப்புகளை குறைக்கலாம்.