தென்கொரியா, சீனா போன்ற நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
மனிதன் உடலில் சில நோய் தாக்குதல்கள் ஏற்பட்டால் அந்த நோயை முறியடிக்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகி விடும். எனவே அதே நோய் மீண்டும் அவனை தாக்காது. குறிப்பாக அம்மை போன்ற நோய்கள் ஒரு தடவை தாக்கினால் மீண்டும் வருவது இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தி துறை நிபுணர் பேராசிரியர் எரிக் வைவர் இதுபற்றி கூறியதாவது:-
ஒரு சில நோய்களை மட்டுமே மனிதன் உடலில் உருவாகும் எதிர்ப்பு சக்தி வாழ்நாள் முழுவதும் தடுக்கும். ஆனால் கொரோனா வைரசை பொருத்தவரையில் அவ்வாறு தடுப்பதற்கு சாத்தியம் குறைவாகவே இருக்கிறது.
கொரோனா வைரஸ் ஆர்.என்.ஏ. மரபணு ரீதியானது. பொதுவாக ஆர்.என்.ஏ. மரபணு வைரஸ்களை மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தி சரியாக முறியடிப்பது இல்லை.
ஒருவர் உடலில் இந்த நோய் ஏற்பட்டு விட்டால் அதை எதிர்த்து போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாக 3 வாரங்கள் வரை ஆகும். ஆனால் அந்த நோய் எதிர்ப்பு சக்தி சில மாதங்கள் வரையே உடலில் நீடிக்கும். எனவே அந்த காலகட்டம் முடிந்ததும் மீண்டும் நோய் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது சம்பந்தமாக இன்னும் முழுமையாக ஆய்வு நடத்தியதற்கு பிறகு தான் முழு விவரமும் தெரியவரும் என இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரசை நோய் எதிர்ப்பு சக்தி நீண்ட காலத்திற்கு எதிர்க்க முடியுமா? என்பது இன்னும் கண்டறிய முடியவில்லை. அதற்கு சில நாட்கள் தேவைப்படும். அதன் பிறகு தான் அதை உறுதியாக சொல்ல முடியும் என்றார்.
லண்டனில் உள்ள மரபணு பல்கலைக்கழக பேராசிரியர் பிரான்கோ பல்லக்ஸ் கூறும்போது, 2002-ம் ஆண்டு பரவிய சார்ஸ் நோயினால் 800 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் அப்போது மனிதன் உடலில் உருவாகி இருந்த நோய் எதிர்ப்பு சக்தி 3 ஆண்டுகள் வரை மட்டுமே உடலில் இருந்தது. அதன்பிறகு மறைந்து விட்டது.
எனவே மீண்டும் அவரை அதே நோய் தாக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதுபோல இந்த கொரோனா வைரசால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியும் குறிப்பிட்ட காலம் மட்டுமே உடலில் இருக்கலாம். அதன்பிறகு அந்த நோய் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
சீனாவில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்த குரங்குக்கு மீண்டும் கொரோனா வைரசை செலுத்தினார்கள். ஆனால் அந்த குரங்கு உடலில் ஏற்பட்டு இருந்த எதிர்ப்பு சக்தி மீண்டும் நோய் ஏற்படாமல் தடுத்து விட்டது.
அதே நேரத்தில் தென்கொரியாவில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுசம்பந்தமாக தொற்று நோய் நிபுணர் பிரடெரிக் கூறும்போது, மனித உடலில் ஏற்படும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மை குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. அதன்பிறகு தான் இதில் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று கூறினார்.