Ads Area

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தோர் இலங்கை வந்து மீண்டும் குவைத்துக்கு செல்வதில் தடையில்லை.

ஊடக வெளியீடு

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை குவைத்திலிருந்து நாட்டிற்கு மீள அழைத்து வரும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன

சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருந்த இலங்கையர்களுக்காக குவைத் அரசாங்கம் அறிவித்த பொது மன்னிப்பின் மூலமாக பயன்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்த இலங்கையர்கள் நாட்டிற்கு நாளை மீள அழைத்து வரப்படவுள்ளனர்.

குவைத் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. அஹ்மத் நாசர் அல் முஹம்மத் அல் சபாஹ்வுடன் தொலைபேசி வாயிலாக இன்று (மே 18) கலந்துரையாடிய வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஏறத்தாழ 460 பேரை உள்ளடக்கிய முதலாவது தொகுதியினர் 2020 மே 19ஆந் திகதி செவ்வாய்க்கிழமை குவைத் எயார்வேய்ஸின் இரண்டு விமானங்களில் நாட்டை வந்தடைவர் என ஒப்புக் கொண்டார்.

குவைத் அரசாங்கம் பதிவுகளை மீள ஆரம்பிக்கும் போது, பொது மன்னிப்புக்குத் தகுதி பெறும் இலங்கையர்களுக்கான அவசரப் பயண ஆவணங்களை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சரிபார்த்து, வெளியிடும் என குடிவரவு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தெரிவித்தார். சட்டபூர்வமற்ற வகையில் தங்கியிருப்பவர்கள் எந்தவிதமான விளைவுகளும் இன்றி வெளியேறுவதற்கும், சட்டபூர்வமான தொழிலுக்காக குவைத்திற்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கும் பொது மன்னிப்பு உதவுகின்றது.

முந்தைய நடைமுறைகளுக்கு அமைவாக, குவைத்தினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் நாட்டிற்கு மீள அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என அமைச்சர் குணவர்தன குவைத் வெளிவிவகார அமைச்சருக்கு உறுதியளித்தார். எவ்வாறாயினும், தனிமைப்படுத்தல் மையங்களிலுள்ள மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலான வெற்றிடங்களுக்கு அமைய இலங்கை அதனை கவனமாக ஒருங்கிணைக்க வேண்டும்.

கோவிட்-19 தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக இரண்டு அரசாங்கங்களும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர். தற்போது குவைத்தில் பணிபுரியும் 100,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு நல்கிய சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஆதரவுகளுக்காக அமைச்சர் குவைத் அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார். குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சமூகத்தினர் மற்றும் குவைத்தை தளமாகக் கொண்ட ஏனைய நலன்புரிக் குழுக்களுடன் இணைந்து, உதவிகள் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்தும் உலர் உணவுப்பொருட்களை வழங்கி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கிடையிலான விமானப் போக்குவரத்திலுள்ள வரம்புகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தேயிலை மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்குமாறு வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் குவைத் வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தினார். பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களை குவைத்திலிருந்து அழைத்து வரும் விமானங்கள், இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களை குவைத்துக்கு மீள எடுத்துச் செல்லவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விடயங்களின் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்யும் பொருட்டு, இரண்டு வார காலங்களில் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்வதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.


வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
18 மே 2020

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe