அமீரகத்தில் வசிக்கும் மக்கள் தங்களது ரெசிடென்ட்ஸ் விசா காலாவதியாகி இருந்தாலும் மே 18 ஆம் தேதி முதல் அவர்கள் எவ்வித அபராதமும் செலுத்தாமல் தங்களுடைய தாய்நாட்டிற்குத் திரும்பலாம் என அமீரக அரசு அறிவித்திருந்தது. விசிட்டிங் விசா மூலம் அமீரகம் வந்தவர்களுடைய விசா காலாவதியாகியிருந்தாலும் அவர்கள் இதன்மூலம் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று மாத காலத்திற்கு இந்த கருணை அடிப்படையிலான நடைமுறை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ரெசிடென்ட்ஸ் விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக அமீரகத்தில் தங்கியிருப்பவர்களும் அபராதம் ஏதும் செலுத்தாமல் தாய்நாட்டிற்குத் திரும்பலாம் என நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அமீரக வெளியுறவுத்துறை மற்றும் துறைமுகங்களின் இயக்குனரான மேஜர் ஜெனரல் சயித் ரக்கான் அல் ரஷிதி (Saeed Rakan Al Rashidi) பேசுகையில்,” கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் தங்களுடைய விசாக்களைப் புதுப்பிக்க இயலாமல் போனது. இந்த விதிவிலக்கான நிலையின் அடிப்படையில் தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் அனைத்து நுழைவு அனுமதி மற்றும் விசா விதிமீறல்களில் ஈடுபட்டோர் தங்களது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நடவடிக்கையின் அடிப்படையில் சட்டவிரோதமாக வசிக்கும் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த நிர்வாக அபராதங்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக ரெசிடென்ட்ஸ் விதிகளை மீறியவர்கள் (residency violators), காலாவதியான நுழைவு அனுமதி மற்றும் ரெசிடென்ட்ஸ் விசாக்களைக் கொண்டிருப்போர் (violated entry and visa permits), ஆதரவளித்தவர்களிடமிருந்து தலைமறைவானவர்கள் (absconders from their sponsors), மார்ச் 1 ஆம் தேதிக்கு முன்னர் தொழில் ஒப்பந்தங்கள் மற்றும் தொழிலாளர் அட்டைகளைக் கொண்டவர்களுக்கான விதிமுறைகளை மீறியவர்கள் (violators of employment contracts) தற்போது தங்களது நாட்டிற்குத் திரும்ப வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் “சட்டவிரோதமாக வசிப்போர் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு அடையாள அட்டைக்கான கட்டணம், புறப்படும் கட்டணம், தொழிலாளர் அனுமதியைப் புதுப்பித்தலுக்கான கட்டணம் மற்றும் விசாக்களை ரத்து செய்வோருக்கான கட்டணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். இப்படி அமீரகத்திலிருந்து வெளியேறுபவர்கள் புதிய வேலை ஒப்பந்தம் கிடைத்தால் மீண்டும் அமீரகம் திரும்பலாம்” என ரதிஷி தெரிவித்தார்.
இன்று வியாழக்கிழமை நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த தள்ளுபடி மற்றும் விலக்கு குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.