Ads Area

பிரசவத்தின் பின்னர் தாய் விரைவில் உடல் நலம்பெற VOG தரும் முக்கிய ஆலோசனைகள்.

பிரசவத்தின் பின்னர் நீங்கள் குணமடைந்து வரும்போது எதிர் கொள்ளக் கூடிய நிலைமைகள் பற்றி அறிந்து கொள்ள இந்தத் தகவல்கள் உங்களுக்கு உதவும்.

முதல் 2 நாட்களிலும் களைப்பும் நித்திரை மயக்கமும் காணப்படுவது சகஜமானது. இந்நிலையில் உங்களுக்கு நல்ல ஓய்வு தேவை. அதிகளவு பானங்களை அருந்துவதோடு சமநிலையான உணவை உட்கொள்ளுங்கள். நீங்கள் 2 பேருக்குரிய உணவை உண்ண வேண்டிய அவசியமில்லை. குழந்தைக்குப் பாலூட்டும் விடயத்தில் எமது தாதிமார் உங்களுக்கு உதவுவார்கள்.

தொற்றுக்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக உங்களைப் பார்க்க வருபவர்களின் தொகையை முடிந்தளவு குறைத்துக் கொள்வது அவசியம்.

நீங்கள் வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டிய சராசரிக் காலம் 1 முதல் 2 நாட்களே.

துரித நிவாரணம் பெறுவதற்காகப் பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுங்கள்:

காயத்தைப் பராமரித்தல்.

குழந்தையை வெளியே எடுப்பதற்காக நாம் உங்கள் உடலில் வெட்டுகளை இட்டிருக்கலாம். அப்பகுதியில் சில தையல்களையும் நாம் போட்டிருக்கக் கூடும். இததையல்கள் இயல்பாகக் கரைந்துவிடக்கூடியவை. முதற் சில நாட்களிலும் இத்தையல்கள் வேதனை தருவனவாக இருக்கலாம். இதற்காகத் தொடர்ந்து வலிநிவாரணிகளைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம். வலி தொடங்க முன்னரே வலி நிவாரணியை உட்கொள்வது முக்கியமானது.

நீங்கள் மெது மெதுவாக நடமாடத் தொடங்க வேண்டும். நீண்ட நேரத் திற்கு உட்கார்ந்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். காயத்தைப் பராமரிப்பதில் சிறந்த சுகாதாரத்தைப் பேணுவது முக்கியத்துவம் பெறுகிறது. உங்களுடைய துப்புரவுத் துணிகளை (Sanitary Pads) உரிய காலத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் கழிவறைக்குச் சென்ற பின்னர் அப்பகுதியை முன்னிருந்து பின்னோக்கி நன்றாகத் துடைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சவர்க்ராரத்தையோ எந்த வித கிரீமையோ பூச வேண்டியதில்லை. பெண்குறியைச் சூழ உள்ள பகுதியைச் சுத்தம் செய்யத் தூய நீரைப் பயன்படுத்துங்கள். காயத்தில் வீக்கமோ வலியோ அதிலிருந்து திரவக் கசிவுகளோ காணப்பட்டால் தயவு செய்து உங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கால்களை நெருக்கி வைத்துக்கொண்டிருந்தால் காயம் விரைவில் ஆறும் எனச் சிலர் ஆலோசனை கூறக்கூடும். எனினும் அப்படிச் செய்வதனால் பற்றீரியா வளர்ச்சி தூண்டப்படுவதற்கும் தொற்றுக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உருவாகும். எனவே இதனைத் தடுப்பதற்காக இப்பகுதிக்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கக் கூடிய விதத்தில் தளர்வான ஆடைகளை அணியுங்கள்.

சிறுநீர் கழித்தல் தொடர்பாக.

ஒழுங்காகச் சிறுநீர் கழியுங்கள். சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படாவிடினும் 3-4 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை கழிவறைக்குச் செல்லுங்கள். ஏனெனில் சிறுநீர் கழிப்பதற்குரிய உணர்வு ஏற்படுவதில் சிறிது பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும். சிறுநீர் கழிக்கும் போது சிறிது எரிவு ஏற்படுவது சகஜமானதே.

நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தினமும் குறைந்தது 2 லிட்டர் நீர் அருந்துவது நல்லது.

மலம் கழித்தல் தொடர்பாக.

மலச்சிக்கல் ஏற்படாமல் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதன் விளைவாக இடுப்புத் தரைத் தசைகளிலும் போடப்பட்டுள்ள தையல் களிலும் பாதிப்பு ஏற்படலாம்.

நார்த்தன்மையான உணவுகளை அதிகளவில் உண்பதோடு கூடுதலாக நீர் அருந்துங்கள் (தினமும் 8 டம்ளர்கள்)

உடற்பயிற்சி

ஆரம்பத்தில் நடத்தல் போன்ற மென் பயிற்சிகளைக் குறுகிய நேரம் செய்யலாம்.

இடுப்புத் தரைத் தசைகளைச் சுருக்கப் பயில்வது பிரசவத்தின் பின்னர் அத்தசைகள் உறுதிபெற உதவும்.

நீச்சல், பிரசவத்துக்குப் பிந்திய உடற் பயிற்சிகள் முதலியவற்றை 6 வாரங்களின் பின்னர் மேற்கொள்ளலாம்.

பிரசவத்தின் சில வாரங்களின் பின்னர், அமர்ந்திருக்கும் போதும் நிற்கும் போதும் உடலைச் சரியான நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தைக்குப் பாலூட்டிய பின்னர் அடிவயிற்றில் தசைப்பிடிப்பு போன்ற நோவு ஏற்படலாம். குழந்தை பாலை உறிஞ்சும் போது கருப்பையில் சுருக்கம் ஏற்படுவதே இதற்குக் காரணம். தேவையாயின் நீங்கள் பரசிற்றமோல் உட்கொள்ளலாம். சூடான டவல் ஒன்றினால் அப்பகுதிக்கு ஒத்தடம் கொடுப்பதும் உதவும்.

யோனி வழியான குருதிப் போக்கு 6 வாரங்கள் வரையேனும் நீடிப்பது சாதாரணமானதே.

உங்கள் விட்டமின்களையும் கனிப்பொருட்களையும் (இரும்பு. கல்சியம் போன்றன) பிரவசத்தைத் தொடர்ந்து வரும் 3 – 6 மாதங்கள் வரை உட்கொள்ளுங்கள்.

நீங்கள் வேறு நோய்களுக்காக மருந்துகளை வழமையாக உட்கொள்வதாயின் அவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளைச் சரிவரப் பின்பற்றுங்கள்.

பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால் வைத்தியருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

01. காய்ச்சல்

02. குளிர்

03. கடுமையான வயிற்று வலி

04. யோனி வழியாகத் துர்வாடை கொண்ட கசிவுகள்

05. சிறுநீர் கழிப்பதில் கடும் சிரமம்

06. காயம் அதிக சிவப்பு நிறமாதல், நோவுதல், வீங்குதல், அல்லது அதிலிருந்து கசிவுகள் வெளியேறல்.

By: Dr Mohamed Rishard,
MBBS, MD, MRCOG (UK), Diploma in Laparoscopy (France)
Obstetrician & Gynaecologist
De Zoyza Hospital for Women
Senior Lecturer, Faculty of Medicine, Colombo

நன்றி - lankahealthtamil.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe