தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைமைச் சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சமூக விஞ்ஞான துறையில் கலாநிதியாகத் திகழும் இவர், கடந்த காலங்களில் இடம்பெற்ற இலவசக் கல்வி, ஜனநாயக சார்பு, தேசிய ஒற்றுமை, தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளக் கோரிக்கை, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பெண்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்புப் போராட்டங்களில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தீர்மானம் இன்று (12) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.