Ads Area

13ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல.

13 ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது.இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13ஆவது திருத்தச்சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe