Ads Area

உரிமை கோரப்படாமல் டுபாயில் உள்ள பிணவறைகளில் இருக்கும் இந்தியர்களின் சடலங்கள் - துணைத் தூதரகத்தின் வேண்டுகோள்.

துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம்  ட்விட்டரில் ஒர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், துபாய் உள்ளிட்ட வடக்கு எமிரேட்களில் இறந்த இந்தியர்களின் சடலங்கள் பல்வேறு பிணவறைகளில் நீண்டகாலம் வைத்திருக்கப்படுகின்றன. அதற்கு மிக முக்கியக் காரணம் இறப்பு குறித்து எங்களிடம் சரியான நேரத்தில் தெரிவிக்காமல் இருப்பதுதான் என துணைத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், இறந்தவரின் உடலை தகனம்/ நல்லடக்கம் அல்லது இந்தியாவிற்கு எடுத்துச்செல்ல உடனடியாக துணைத் தூதரகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக நபர் ஒருவரின் இறப்பு குறித்த செய்தியானது, இறந்தவருடைய முதலாளிகள், ஸ்பான்சர்கள், நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்பங்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும். முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்றத் தேவையில்லாமல் காலம் தாழ்த்துகிறார்கள். இறப்பு குறித்த தகவலைக்கூட துணைத் தூதரகத்திற்கு அவர்கள் தெரிவிப்பதில்லை. இந்த கொரோனா காலத்தில் பிணவறைகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாக  துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

முதலாளிகள் மற்றும் ஸ்பான்சர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் இந்தியர் இறந்தால் +971-507347676 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து தகவலளிக்க வேண்டும். மேலும், இறந்தவருடைய குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இறுதிச்சடங்கை அமீரகத்திலோ அல்லது இந்தியாவிலோ நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இறப்பு குறித்த தகவலை deathregistration.dubai@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்

தங்களது குடும்ப உறுப்பினரோ, நெருங்கிய நண்பரோ இறந்தால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் உடனடியாக துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிப்பதுடன், இறுதிச் சடங்கு குறித்த சம்பிரதாயங்களை மேற்கொள்ள அங்கீகாரமும் அளிக்கவேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதே இறந்தவருடைய ஆன்மாவிற்கு நாம் செலுத்தும் இறுதி வணக்கமாகும் என துணைத் தூதரகம் அளித்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமீரகத்தில் இந்தியர் யாராவது இறந்தால் உடனடியாக துணைத் தூதரகத்திற்கு தகவலளிக்கவேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமீரகத்தில் தங்களது உறவினர் இறந்தது இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரியாததால், பல நாட்களாக பிணவறையிலேயே அவர் உடல் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதுபோல இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதன் காரணமாகவே தற்போது மீண்டும் அமீரக மக்களுக்கு இதுகுறித்த அறிவுரையை வழங்கியிருக்கிறது துணைத் தூதரகம்.

தகவல் - மாதவன் (UAE WEB TAMIL)

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe