நம் உயிரிலும் மேலான கண்மணி நபிகள் நாயகம் அவர்களை கேலி செய்யும் உருவப் படங்களை வரைந்தமைக்காக முஸ்லிம் உலகலிருந்து கண்டனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ப்ரொபைல் மாற்றங்கள், பிரெஞ்சு பொருட்களை பகிஷ்கரித்தல் எனத் தொடங்கிய எதிர் வினை தவறான வார்த்தை பிரயோகங்கள், தனிமனித தாக்குதல்கள், கலாச்சாரங்களை கேலி செய்தல் என நீண்டு செல்லத் தொடங்கியிருக்கிறது.
அகிலத்திற்கு அருட்கொடையாக வந்துதித்த எம்பெருமானார் இந்த காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால் இதை எப்படி ஹெண்டல் பண்ணியிருப்பார் என்பது தான் இங்கே முக்கியமானது. நாம் அறிந்து கொள்ள வேண்டியது.
ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் கொஞ்சமும் குறைவில்லாமல் காக்கப்பட வேண்டும் என்பதுதான் நபியவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தின் அடிப்படை. சக மனிதனின் உயிர், பொருள், மானம் என்பன இறை இல்லமான கஃபத்துல்லாஹ்வை விட மேலானவை கண்ணியமானவை என்பதுதான் அவர்கள் சொல்லித் தந்த மார்க்கத்தின் அடிப்படை.
ஒவ்வொரு தனி மனிதனுக்கும் என்ன தகுதியும்,சிறப்பும், கண்ணியமும் அந்த சமூகத்தில் இருக்கின்றதுவோ, அதே கண்ணியமும், தகுதியும், சிறப்பும் அப்படியே அவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நபியவர்கள் காட்டித் தந்த வழிமுறை. அவர் முஸ்லிமாகவோ முஸ்லிமல்லாதவராகவோ இருந்தாலும் சரியே.
மக்கா வெற்றியின் போது யாரெல்லாம் கஃபத்துல்லாவில் தஞ்சம் அடைந்தார்களோ அவர்களெல்லாம் அபயம் பெற்றவர்கள் என்று அறிவித்த ரசூலுல்லாஹ் தான் யாரெல்லாம் அபூஸுஃப்யானின் வீட்டிலும் தஞ்சமடைந்தார்களோ அவர்களும் அபயம் பெற்றவர்கள் என்றும் அறிவித்தார்கள். எதிரிகளின் தலைவனாக இருந்த , சமூகத்தில் தனக்கொரு அந்தஸ்தை வைத்திருந்த அபூஸுஃப்யானை நபியவர்கள் அதே அந்தஸ்தோடும் கண்ணியத்தோடும் நடத்தியிருக்கிறார்கள்.பெருமையை அந்தஸ்தை விரும்பக் கூடிய குறைஸிக் தலைவராக இருந்த ஆபூஸூப்யானின் கௌரவத்தையும், பெருமையையும் அப்படியே கொடுத்து அவரை கண்ணியப்படுத்தினார் எம் கோமான் முஹம்மத் நபி(ஸல்).
அபூ ஜஹ்லைப் பற்றி அவரது மகன் இக்ரிமா இருக்கிற சமயங்களில் பழங்கதைகள் பேசுகின்ற தறுவாயில் தவறுதலாக இழிவாகப்பேசி விடாதீர்கள் என்று தனது தோழர்களை கண்டித்து வைத்த நம் பயகம்பரின் முன்மாதிரியான பண்பு தான் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது .என்னதான் எதிரியாய் இருந்தாலும், முஸ்லிம்களுக்கும் றசூலுல்லாஹ்வுக்கும் நிறைந்த அநியாயங்களை செய்திருந்தாலும் இக்ரிமாவுக்கு அவர் தந்தை, தலைவர். தந்தையை மற்றவர்கள் இகழ்வது ஒரு தமையனுக்கு எவ்வளவு வருத்தம் தரும் கவலைகளைத் தரும் என்பதை புரிந்து கொண்டு நடந்து கொண்டவர்கள் தான் நபிகள் நாயகம். என்ன தான் அவர் அபூ ஜஹ்லாக இருந்தாலும் அவர் அந்த ஜாஹிலிய சமூகம் போற்றிய ஒரு தலைவர் என்பதை விளங்கி நடக்குமாறு அறிவுரை கூறிய அந்தப் பண்பு தான் நாங்கள் எடுத்து நடக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
எதிரியாக இருந்தாலும், காபிராக இருந்தாலும் தலைவன் தலைவனாகவே நடத்தப்படவேண்டும், அந்தஸ்தும் கௌரவமும் உள்ளவர்கள் அதே அந்தஸ்தும் கௌரவமும் உள்ளவர்களாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நாம் விளங்க வேண்டிய நபி வழி.
வழமை போலவே இந்த நபி வழியை மறந்து விட்டு, உணர்ச்சிகளுக்கு அடிமையாகி எதிர்வினை ஆற்றுவார்களாக நாங்கள் மாறி இருக்கிறோம். கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்த பிரான்ஸ் நாட்டின் தலைவரை எவ்வளவு தூரத்திற்கு நாங்கள் தூற்றுகிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது நபியவர்கள் காட்டிய முன்மாதிரி நம்மிடம் மருந்துக்குக்கூட இல்லை என்பது தான் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாக இருக்கிறது.
நல்ல பழக்க வழக்கங்களையும், மனித விழுமியங்களையும் மற்றவர்களை எப்போதும் மதிப்பதையும் நமக்கு கற்றுத் தந்த பயகம்பர் நபிகள் நாயகம் மீது நாம் கொண்ட அன்பு அவர்கள் காட்டிய வழியில் நடப்பதிலே தான் வெளிப்பட வேண்டும். நபிகளின் மீது கொண்ட முஹப்பத்தின் காரணமாக எதிர்வினை ஆற்றுகிறேன் என்ற போர்வையில் மற்றவர்களை விமர்சிப்பதும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டிக் கிளறுவதும், அவர்களை கண்ணியக் குறைவாக நடத்துவதும் நபி வழி கிடையாது என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்
என்னதான் அவர் கேலிச்சித்திரத்தை ஆதரித்தாலும் அவர் ஒரு நாட்டின் தலைவர் அவருக்கு வழங்கப்பட வேண்டிய மரியாதையும் கண்ணியமும் கட்டாயம் அவருக்கு வழங்கப்பட வேண்டும். இது தான் எனக்குத் தெரிந்த நான் அறிந்த இஸ்லாம்.
மார்க்கம் பேசுபவர்களில் சிலரும் இஸ்லாமிய வாதிகளாக தங்களை காட்டிக் கொள்பவர்கில் பலரும் இந்த கண்ணியத்தை அவருக்கு கொடுக்காமல் அவரை மோசமாக விமர்சிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. அவர் பற்றிய மோசமான உருவச் சித்திரங்கள் பகிர்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது
பிரான்ஸின் செயலுக்கு எதிர்வினை ஆற்றுவது கட்டடாயம். காலத்தின் தேவை என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இருந்தாலும் அந்த எதிர்வினை நம் பெருமானார் கற்றுத்தந்த வரம்புகளையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் அமைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் ஒரு நடுநிலை சமுதாயமாக இருப்போம். உண்மையில் நபியவர்களே நேசித்தவர்களாக மாறுவோம்.
Dr PM Arshath Ahamed MBBS MD PAED
குழந்தை நல மருத்துவர்.