Ads Area

சமூகத்தில் உள்ள சிலரின் நெறிபிறழ்வு ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விடும்.

அன்பின் சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..

அல்லாஹ்வின் மிகப் பெரும் அருளால் இந்த நாட்டு முஸ்லிம்களாகிய எங்களுக்கு இஸ்லாம் இஸ்லாமிய வாழ்வு நெறி, அடிப்படை சட்டதிட்டங்கள், வணக்க வாழிபாடுகள் குறித்த போதுமான அறிவும் தெளிவும் இருக்கின்றது.

இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய இயங்குகின்ற அங்கீகாரம் பெற்ற இஸ்லாமிய அமைப்புகள், உலமா சபை, மத்ரஸாக்கள், ஜாமியாக்கள் உலமாக்கள் கல்விமான்கள் முஸ்லிம் அரசினர் தனியார் பாடசாலைகள் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவைகளையாற்றி வருகின்றன.

என்றாலும் கடந்த சில வருடங்களாக போருக்கு பின்னரான இலங்கையில் முஸ்லிம் சமூகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்தாலும் கூட்டுப் பொறுப்புடன் எம்மால் இயன்றவரை அவற்றை பொமையாகவும் நிதானமாகவும் நாம் கையாண்டு வந்ததோடு தேசிய வாழ்வில் சரியின பரிமாணங்களில் எம்மை தகவமைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தோம்.

துரதிஷ்டவசமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பயங்கரவாதச் செயல்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போன்ற நிலையை எமது சமூகத்திற்கு ஏற்படுத்தியுள்ளமையை நாம் அறிவோம்.

நாம் எதிர்கொள்கின்ற சவால்களுக்குப் பின்னால் ஒரு சிறுபான்மைச் சமூகமான எமது வரலாற்றுத் தவறுகள் இருந்த போதும், அவற்றை பூதகரமான விவகாரங்களாக அரங்கேற்றி அவற்றில் முதலீடு செய்கிற தேசிய பிராந்திய சர்வதேசிய சக்திகளின் தலையீடுகள் பாரிய நிகழ்ச்சி நிரல்களுடன் எம்மைக் குறி வைத்துள்ளதனை அண்மைக்கால நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இவ்வாறான ஒரு கால கட்டத்தில் தலைமைத்துவமற்ற கட்டுக்கோப்புகளற்ற ஒரு சமூகமாக நாம் இருந்துவிட முடியாது, தேசிய மட்டம் முதல் அடிமட்டம் வரை எம்மை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம்.

சமூகத்தில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரின் நெறிபிரழ்வு ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் இனிமேலும் இடம்பெறுவதனை எம்மால் அனுமதிக்க முடியாது.

கருத்து வைற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒரு சமூகமென்ற வகையில் மனிதர்களாக முஸ்லிம்களாக எமக்கு மத்தியில் நாம் பரிந்துணர்வை ஐக்கியத்தை கட்டி எழுப்பக் கடமைப் பட்டுள்ளோம், அத்தகைய விழிப்புணர்வு தேசிய அளவில் ஏற்பட்டுள்ள போதும் நடைமுறையில் அதனை பிரதிபலிக்கச் செய்கின்ற ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு பொறிமுறைகளை எல்லா மட்டங்களிலும் நாம் ஏற்படுத்திக் கொள்வதில் இன்னும் பின் நிற்கிறோம்.

இந்த நிலையில் எமது இளைய தலைமுறையினரை கட்டுக்கோப்புடன் கண்காணித்து வழிநடாத்த வேண்டிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது, குறிப்பாக இஸ்லாத்தின் பெயரால் அவர்கள் பிழையாக வழிநடாத்தப் படாதிருப்பதனை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறும் வரையும் அதனோடு தொடர்புடைய இளைஞர்களின் நடவடிக்கைகள் குறித்து நாங்கள் அறிந்திருக்க வில்லை, தேசத்தின் எல்லைகளுக்கு உள்ளோ அல்லது வெளியே அவர்கள் கொண்டிருந்த தொடர்புகள் அவர்களை கையாண்ட சக்திகள் குறித்து நாம் அறிந்திருக்வும் இல்லை.

இப்பொழுது  இந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய நிறுவனங்கள், தொண்டர் சேவை அமைப்புக்கள், மத்ரஸாக்கள், ஜாமியாக்கள் என சகல தரப்பினரும் மிகவும் நுணுக்கமாக கண்காணிக்கப் பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நாட்டின் சில பகுதிகளில் கல்வி உயர்கல்வி அவசியமில்லை அரச பாடசாலைகள் பல்கலைக் கழகங்கள் தேவையில்லை அலோபதி ஆங்கில மருத்துவத்துறை அவசியமில்லை நோய்த் தடுப்பூசிகள் அவசியமில்லை என சிலர் இளம் தலைமுறையினரை வழிகெடுப்பதாக முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்டின் சட்டப்படி ஆரம்பக்கல்வி சிறார்களின் அடிப்படை உரிமையாகும் அதனை மறுப்பதற்கு பெற்றார்களுக்கு கூட உரிமை கிடையாது, அதேபோல் தேசிய தடுப்பூசி வேலைத்திட்டம் அனைவரையும் கட்டுப் படுத்தும் அரச வேலைத்திட்டமாகும், அரச சுகாதார கல்வி உயர்கல்வித் துறைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் குற்றவியல் சடாடங்களின் படி தண்டிக்கப் பட வேண்டிய குற்றங்களாகும்.

அவ்வாறான நடவடிக்கைகள் மார்க்கத்தின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற பொழுது அடிப்படைவாதமாகவும் தீவிரவாதமாகவும் பயங்கரவாதமாகவும் கருதப்படுவதற்கும் பயங்கரவாத தடைச் சட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப் படவும் இடமிருக்கிறது.

நபிமார்கள் ஆடு மாடு மேய்த்தார்கள், விவசாயம் செய்தார்கள் சஹாபாக்களும் அப்படித்தான் அவர்கள் பாடசாலை பல்கலைக் கழகம் சென்றார்களா..? இது அழிந்துபோகும் துன்யாவுடைய வாழ்க்கை, நிலையான சுவர்க்கத்திற்காக உழைப்போம் மாடு மேய்ப்போம்..வாங்க என இளைஞர்கள் சிறார்களை தவறாக வழிநடாத்துகிற தரப்புக்கள் தலைதூக்குவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் சமூகத் தலைமைகள் உலமாக்கள் புத்திஜீவிகள் ஊர்த்தலைமைகள் இளைஞர் மாதர் அமைப்புகள் பாடசாலைககள் இவ்வாறான தீய சக்திகள் முளைவிடுவதனை தடுப்பதற்குறிய காத்திரமான நடவடிக்கைகளை கூட்டுப் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் சமூக குடும்ப கட்டுக் கோப்புகளை தீவிரமாக மீறுகிற  தரப்புக்கள் குறித்து உரிய தரப்புக்களிடம் முறையீடுகளை செய்யவும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தவும் தவறுகிற பட்சத்தில் நாளை காலம் கடந்து ஒட்டுமொத்த சமூகமும் குடும்பங்களும் கைசேதப்படுகின்ற அவல நிலைகள் ஏற்படலாம், எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை நேரிய வழியில் பயணிக்கச் செய்வானாக!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe