கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டிலிருந்து ஒப்படைக்கப்பட்டகுப்பைப் பொதியினுள் காணப்பட்ட 150,000 ரூபா பணம் அவ்வீட்டு உரிமையாளருக்கு மீளக் கிடைத்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (22) கல்முனை நகர மண்டப வீதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டு உரிமையாளர் இன்று (22) தனது தங்க நகை ஒன்றை வங்கியில் அடகு வைத்து, பெற்று வந்த பணம், திண்மக்கழிவுகளை சேகரிக்கும் வாகனத்தில் ஒப்படைக்கப்பட்ட குப்பையினுள் தவறுதலாக சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. வாகனம் சென்று நீண்ட நேரத்தின் பின்னர் இது தொடர்பில் உணரப்பட்டதைத் தொடர்ந்து இப்பகுதி திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக செயற்பட்டு, வாகன சாரதி மற்றும் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட அனைத்து கழிவுக் குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தேடிக் கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார் என மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தெரிவித்தார்.
இந்த செயற்பாட்டின் காரணமாக கல்முனை மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டித் தந்த குறித்த மேற்பார்வையாளர் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.