Ads Area

சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சிறுமி! முறையான விசாரணை கோரி போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடாத்தக்கோரியும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறும், வலியுறுத்தி பெரியகல்லாறு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் கொட்டும் மழையின் மத்தியிலும் வீதியை மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சிறுமியின் மரணம் கொலையெனவும் கொலைக்கு நியாயம் வேண்டும் எனவும் கோசம் எழுப்பியுள்ளதுடன்,ஊர்வலமாக பிரதான வீதியில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தியவர்கள் மட்டக்களப்பு –கல்முனை வீதியையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி ஆர்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், 48 மணித்தியாலத்திற்குள் அவர்களை கைது செய்வோம் என வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறுமியின் மரண வீட்டுக்கு சென்று இறுதிச்சடங்கிலும் கலந்துகொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 11வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், குறித்த சிறுமி கடுமையான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி பாட்டியின் வீட்டில் இருந்தபோது தாக்கப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது சனிக்கிழமை வைத்தியசாலையில் இருந்த சிறுமியை சிறிய தாயார் அழைத்துச்சென்ற நிலையில் சிறிய தாயின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிறுமி சித்திரவதைக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறித்த சிறுமி நீண்ட காலமாக துன்புறுத்தலுக்குள்ளாகிய நிலையில் துன்புறுத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.அது தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe