சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் உள்ள அல்-அக்ஸா வித்தியாலயத்தில் தரம் 10 மற்றும் தரம் 11 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் சமூக சேவகரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தருமான கௌரவ அஸ்மி யாசீன் அவர்கள் இவ் வருடம் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிக்கும் தரம் 10 இல் கல்வி கற்கவுள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக அவர்களுக்குத் தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்கள். மேலும் இந் நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ சபூர் தம்பி, வலையக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேச மாணவர்களின் நன்மை கருதி இப் பாடசாலையில் தரம் 10 மற்றும் தரம் 11 க்கான புதிய வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு கடந்த காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதும் தற்போதைய அதிபர் ஏ.பி. ஹிபத்துல்லா அவர்களின் முயற்சியினால் தரம் 10, 11 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையானது இப் பாடசாலை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்.
1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையானது ஆரம்ப காலத்தில் நெய்னாகாடு முஸ்லிம் வித்தியாலயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்து தற்போது அல்-அக்ஸா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றமை குறிப்பிடத் தக்கதாகும்.