ஆனால், சவூதி அரேபியாவில் இப்படிப்பட்ட நகரம் ஒன்று உருவாக்க தற்பொழுது திட்டமிடப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்படவிருக்கும் இந்த நகரத்தில் சுமார் 1 மில்லியன் மக்கள் குடியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. நம்ப முடியவில்லையா?? ஆனால் அதுதான் உண்மை.
சவூதி அரேபியாவின் மகுட இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் வடமேற்கு கடற்கரை பகுதியில் உள்ள நியோம் (Neom) மெகாபிரோஜெக்டில் நவீன புதிய நகரத்திற்கான திட்டங்களை வெளியிட்டுள்ளார். ‘தி லைன்’ (The Line) எனக் கூறப்படும் இந்த வளர்ச்சி திட்டமானது நியோம் எனப்படும் 500 பில்லியன் டாலர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டில் நகரத்தில் ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் மற்றும் 380,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் இளவரசர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நகரின் உள்கட்டமைப்பு திட்டத்திற்கு 100 பில்லியன் டாலர் முதல் 200 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தி லைன் எனும் இந்த புதிய நகரமானது 170 கிமீ (105 miles) நீளத்திற்கு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நகரத்திற்கான திட்டங்களில் கார்கள், வீதிகள் இல்லை என்றும் “பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு” ஆகியவை அடங்கும் என்றும் இளவரசர் முகமது கூறியுள்ளார். அத்துடன் இந்த நகரத்திற்கான கட்டுமானப் பணிகள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சிட்டியில் எங்கு செல்ல வேண்டுமானாலும் 20 நிமிடங்களிலேயே சென்றடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இளவரசர் சல்மான் அவர்கள், தி லைனுக்குள் எந்த பயணமும் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்காது என்று கூறியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இந்த நகரம் 100 சதவீதம் இயங்கும் என்றும், மேலும் பாரம்பரிய நகரங்களுடன் ஒப்பிடும்போது உள்கட்டமைப்பு செலவு 30 சதவீதம் மலிவாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். பள்ளிகள், மருத்துவ கிளினிக்குகள், ஓய்வு இடங்கள் மற்றும் பார்க் போன்ற அனைத்து அத்தியாவசிய தினசரி சேவைகளும் அருகாமையிலேயே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நியோம் (Neom) என்பது சவூதி அரேபியாவின் விஷன் 2030 (Vision 2030) என அழைக்கப்படும் எண்ணெய் பல்வகைப்படுத்தல் திட்டத்தின் முதன்மை திட்டமாகும், இது நாட்டின் ஹைட்ரோகார்பன்களின் நம்பகத்தன்மையை குறைக்க முயல்கிறது. இது பொது முதலீட்டு நிதியத்தால் மேற்பார்வையிடப்பட்டு, நூறாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர்களை பங்களிக்கவும் அமைக்கப்பட்டுள்ளது.
நியோம் 26,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இது நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் நிறுவன மண்டலங்கள், ஆராய்ச்சி மையங்கள், விளையாட்டு இடங்கள், பொழுதுபோக்கு தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
தி லைன் குறித்து கூறுகையில், “பூஜ்ஜிய கார்கள், பூஜ்ஜிய வீதிகள், பூஜ்ஜிய உமிழ்வுகள்” கொண்ட மனிதகுலத்திற்கான ஒரு புரட்சி திட்டமாக இது இருக்கும் என்றும் சவூதி இளவரசர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Thanks - Khaleej Tamil News.