நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் காங்கிரசை நம்ப முடியாது என்றும் இனி வரும் தேர்தல்களில் தனித்தே களமிறங்குவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஃரூப் சொல்வது இந்த வருடத்தின் வேடிக்கையான கருத்தாகும். இந்த உறுப்பினர்கள் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் போதும் இப்படித்தான் சொன்னார்கள். பின்னர் தேர்தல் வந்ததும் தமது கட்சியின் அமைப்பாளர்களை கைவிட்டு விட்டு முஸ்லிம் காங்கிரசிடம் மொத்தமாக யானையை ஒப்படைத்ததை கண்டோம் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அறிக்கையில்
அதே போல் 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது அதற்கு முன் ஐ தே கவுடன் ஒட்டியிருந்த மு. கா அக்கட்சியை கைவிட்டு வெளியேறிய போது உலமா கட்சி மட்டுமே முஸ்லிம் கட்சி என்ற வகையில் ஐ தே கவுக்கு கை கொடுத்தது. அப்படியிருந்தும் அக்கட்சி நன்றி மறந்து மீண்டும் மு. காவிடம் சரணடைந்தது. அத்தேர்தலில் உலமா கட்சி ஐ தே கவுக்கு ஒத்துழைக்க ஏற்பாடு செய்த முஜிபுர்ரஹ்மான் அவர்கள் பின்னர் நான் என்ன செய்வது, தலைவர் நாம் சொல்வதை கேட்கிறாரில்லை என கை விரித்தார்.
சிறிய கட்சிகளை பேரின கட்சிகள் அழைத்து அவை மூலம் பிரயோசனம் அடைந்து விட்டு பின்னர் அவற்றை கை விடுவதும், கொஞ்சம் பெரிய கட்சிகளுடன் இணைந்து தம் சொந்தக்கட்சி அமைப்பாளர்களை கை விடுவதும் இலங்கை அரசியலில் இன்னமும் மாறாத ஒன்றாக உள்ளது. அதே போல் ஐ தே கவின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளர்கள் பலர் கை விடப்பட்ட பரிதாப நிலையையும் கண்டோம். அவர்கள் தமது ஆதரவாளர்களுக்கு சேவை செய்ய முடியாமல் ஹக்கீமின் வாசலில் போய் நிற்கும் நிலையை ஐ தே க ஏற்படுத்தியிருந்தது.
இப்போது அதே பாட்டை மீண்டும் ஐ தே கவிலிருந்து பிரிந்துள்ள ஐ ம. சக்தி எம் பீக்கள் சொல்கின்றனர். ஆனாலும் மு. காவை இனி சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்னமும் வாய் திறக்கவில்லை. கட்சித்தலைவர் இவ்வாறு பகிரங்கமாக சொல்லாதவரை கட்சியின் முஸ்லிம் உறுப்பினர்கள் சொல்வது குப்பைத்தொட்டிக்குள்தான் போகும்.
அதன் பின் அக்கட்சியின் முஸ்லிம் பிரதேச அமைப்பாளர்கள் மீண்டும் கைசேதப்பட்டவர்களாக முஸ்லிம் காங்கிரசின் கீழ் அடிமைகளாக வேலைக்காரர்களாக இருந்து கொண்டு ஒப்பாரி வைக்கும் நிலை ஏற்படும். ஆகவே இது பற்றி சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிக்கை விடுவாரா என உலமா கட்சி சவால் விடுக்கிறது என தெரிவித்துள்ளார்.