கத்தார் நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தொழிலாளர் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் தற்பொழுது கத்தாரில் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சகம் சனிக்கிழமை முதல் அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதாக கத்தார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய விதிகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு 1,000 கத்தாரி ரியால்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை தங்குமிடம் மற்றும் உணவு இரண்டையும் தொழிலாளருக்கு நிறுவனமோ அல்லது முதலாளியோ வழங்காவிட்டால், மாதத்திற்கு கூடுதலாக முந்நூறு ரியால்கள் உணவுக்காகவும் 500 ரியால்கள் தங்குமிடத்திற்காகவும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த குறைந்தபட்ச ஊதியம் கத்தாரில் பணிபுரியும் வீட்டு தொழிலாளர்கள் உட்பட அனைத்து துறைகளிலும் உள்ள ஊழியர்களை உள்ளடக்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து நிர்வாக மேம்பாட்டு அமைச்சர் யூசுப் முகமது கூறுகையில், ஒரு குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் துறை மாற்றங்களின் ஒரு பகுதியாக, கத்தாரில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வேலை ஒப்பந்தங்களை நிறுத்த இனி NOC சான்றிதழ் தேவையில்லை என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதனால் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறி பணிபுரிவது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இனி சுலபமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஊழியர்களுக்கு தங்கள் ஒப்பந்தங்களை நிறுத்துவதற்கான உரிமை வழங்கப்படுகிறது, அவர்கள் இரண்டு வருடங்கள் அல்லது அதற்கும் குறைவாக நிறுவனத்தில் பணிபுரிந்திருந்தால் குறைந்தது ஒரு மாத எழுத்துப்பூர்வ அறிவிப்பையோ அல்லது இரண்டு வருடங்களுக்கும் மேலாக நிறுவனத்தில்பணிபுரிந்திருந்தால் இரண்டு மாத அறிவிப்பையோ வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த தொழிலாளர் சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது மற்றும் முதலீட்டாளர்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான வாய்ப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Thanks - https://www.khaleejtamil.com/