இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமீரக அரசானது இந்த புதிய திட்டத்தின் கீழ் இரண்டு புதிய விசாக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் கீழ், அனைத்து நாட்டு மக்களுக்கும் பலமுறை நுழையும் சுற்றுலா விசாவிற்கு (multi entry tourist visa) ஒப்புதலும் தொலைதூர வேலை விசா வழங்குவதற்கும் (remote work visa) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொழில் வல்லுநர்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்துக் கொண்டே வெளிநாடுகளில் உள்ள தங்கள் நிறுவனங்களில் வேலை செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் தெரிவிக்கையில், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்காக நெகிழ்வான திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து உருவாக்கி வருவதாக இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், “உலகளவில் நமது பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான தெளிவான நோக்கங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.. எங்கள் வளர்ச்சி பயணம் நீடிக்கிறது” என்று கூறியுள்ளார்.
ரிமோட் வொர்க் விசா (Remote Work Visa)
இதன் கீழ் வழங்கப்படும் ஒரு வருட விசா, உலகெங்கிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் தங்கள் நிறுவனங்கள் வேறொரு நாட்டில் அமைந்திருந்தாலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கொண்டே வேலை செய்ய உதவுகிறது.
அவர்கள் தங்கள் சொந்த நிதியுதவியின் கீழ் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கலாம் என்றும் அவர்கள் விசாவுடன் வழங்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப வேலை செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த பயன்பாடுகள் மற்றும் தொலைத் தொடர்புகள் உட்பட தேவையான அனைத்து சேவைகளையும் அணுகுவதன் மூலம் இந்தத் திட்டம் தொழில்முனைவோர் (entrepreneurs) மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு (professionals) ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அதன் பாதுகாப்பான மற்றும் கவனத்தை ஈர்க்கும் வகையான வணிகச் சூழலை அனுபவிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
இது வேலை-வாழ்க்கை (work-life) சமநிலையை மேம்படுத்துதல், உற்பத்தித்திறனை அதிகரித்தல் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஊழியர்களுக்கு அவர்களின் டிஜிட்டல் திறன்களை விரிவுபடுத்துவதற்கும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கும் உதவுகிறது
மல்டி என்ட்ரி டூரிஸ்ட் விசா (Multi Entry Tourist Visa)
இந்த ஐந்தாண்டு விசாவின் அடிப்படையில், விசா வைத்திருப்பவர் ஒவ்வொரு முறை அமீரகத்திற்கு நுழையும் போதும் 90 நாட்கள் வரை நாட்டில் தங்கலாம். மேலும் கூடுதலாக 90 நாட்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம்.
இந்த விசாவானது அனைத்து நாட்டு மக்களுக்கும் பொருந்தும் என்றும் விசா வைத்திருப்பவர்கள் விசா காலம் முடியும் வரையில் பல முறை அமீரகத்திற்குள் நுழைந்து வெளியேறலாம் என்று தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு நன்றி - https://www.khaleejtamil.com/