பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
அம்மானிடம் போவதென்றால், சும்மா போவது கடினம். ஒரு சாராய போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டுமென அவர் கூறியிருக்கின்றார். அதுவும் ஆட்டோவிலும் போக முடியாது. காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார்.
அதுவும் பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
இப்படிக்கூறியால் மக்கள் தான் என்ன நினைப்பார்கள். தமிழன் எங்கு தான் வாழ்கின்றானோ அவனுக்காக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சரும் பிரதமரின் மட்டு அம்பாறை விசேட அமைப்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களுக்கான கட்சியின் நியமனம் வழங்கும் நிகழ்வானது ஞாயிற்றுக்கிழமை (28) செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் இடம்பெற்ற வேளை கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,
அண்மையில் எனக்கு ஒரு தகவல் வந்தது. அம்மானைச் சந்திக்க வேண்டுமென ஒருவர் கேட்டிருக்கின்றார். அம்மானிடம் போவதென்றால் சும்மா போவது கடினம். ஒரு சாராயப் போத்தலும் நாட்டுக்கோழியும் வேண்டுமென அவர் கூறியிருக்கின்றார்.
அதுவும் ஆட்டோவிலும் போக முடியாது. காரில் வந்தால் மாத்திரமே கூட்டிச்செல்வதாகவும் கூறியுள்ளார். அதுவும் பெற்றோலுக்கு 10 ஆயிரம் ரூபா முற்பணமாகவும் வழங்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இப்படி கூறினால் மக்கள் தான் என்ன நினைப்பார்கள்.
இன்று வேலைவாய்ப்பிற்காக காசு வாங்குகின்றார்கள். அவர்களை பொலிஸில் ஒப்படைக்கச் சொல்லிக் கூறியுள்ளேன். நமக்கு அந்தக்காசு வாங்கும் கொள்கையில்லை. நாம் கட்சியை வளர்த்துச் செல்வதே நோக்கமாகும்.
ஆனால், கொள்கை மாறவில்லை. தமிழ் மக்களின் விடிவிற்காகப் போராடினோம். அதில் முடிவு காணவில்லை. இனி அரசியல் ரீதியாக அதனை பெற ஆரம்பித்து தற்போது கட்சியை ஆரம்பித்து திறம்பட மேற்கொண்டுள்ளோம்.
அந்த அடிப்படையில், எமது கட்சி பலமான கட்சியாக வளர்ந்து வருகின்றது. எமக்குள் பிரதேசவாதமில்லை. அம்பாறை, திருகோணமலை, வன்னி ஆகிய பகுதிகளிலும் எமது கட்சி அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளோம்.
தமிழன் எங்கு வாழ்கின்றானோ, அவனுக்காக குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன். எமக்காக உலகம் முழுவதும் எத்தனை பேர் சிரமப்படுகின்றார்கள். அம்பாறை மாவட்டத்தில் தேர்தலில் நான் நிற்கின்ற போது வெளிநாட்டிலுள்ள அத்தனை நல்லுள்ளங்களும் நிதிகளை வழங்கினார்கள்.
உண்மையில், அவர்களை மறக்க முடியாது. முகநூலில் எமக்காகப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம் அம்பாறை மாவட்ட மக்கள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கல்முனைப் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தலுக்கான சகல விடயங்களும் முடிவுறும் நிலையில் அவற்றை உரிய தரப்பினரிடம் ஒப்படைத்துள்ளேன் என்றார்.
இதன் போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்குமுகமாக அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பாளருக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.