சிங்கள சமுகத்தின் மத்தியில் அரசாங்கம் தொடர்பில் எழுந்துள்ள எதிர்ப்பலைகளை மறைக்கவே தலைவர் றிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ளார் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமாகிய ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று இந்த அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் பாரிய அதிர்ப்தியில் உள்ளனர் குறிப்பாக பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெறச் செய்த சிங்கள மக்களே இவ்வாறு பாரிய அதிர்ப்தியில் உள்ளனர். இந்த அரசாங்கத்தில் இடம் பெறும் ஊழல், விலைவாசி உயர்வு, குற்றவாளிகளின் விடுலை, சீன ஆதிக்கம் மற்றும் துறைமுக நரகம் போன்றவற்றினால் சிங்கள மக்களும், சிவில் அமைப்புக்களும், பௌத்த மதகுருமார்களும் இந்த அரசாங்கத்தின் மீது பாரிய அதிர்ப்பதியில் உள்ளனர், ஆங்காங்கே அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வாறான மக்களின் எதிர்ப்பலைகளை மறைத்து அவர்களை திசை திருப்புவதற்காகவே தற்போது அநியாயமான முறையில் எமது மக்கள் காங்ரஸ் தலைவர் றிஷாத் பதியுத்தீன் அவர்களையும், அவரது சகோதரரையும் கைது செய்துள்ளார்கள்.
புனித ரமழான் மாதத்தில் நடுநிசியில் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுத்தீன் சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்திக் கைது செய்யப்பட்டுள்ளமையானது இந்த அரசின் அரசியல் பழிவாங்கலையும், சீன துறைமுக நகர திட்டம் தொடர்பிலான மக்களின் எதிர்பலைகளை திசை திருப்பும் நோக்கத்தையும் கொண்டதாகவே உள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்ய வேண்டுமானால் பாராளுமன்றத்திற்கோ அல்லது சபாநாயகருக்கோ முன் அறிவித்தல் கொடுக்க வேண்டும். ஆனால் எந்த வித அறிவித்தலுமில்லாமல் இவ்வாறு கைது செய்வது சட்ட மீறலும், பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலுமாகும்.
தேர்தல் வெற்றிகளை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட போலிப் பிரசாரத்தை கிராமப்புற அப்பாவிச் சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ந்தும் சந்தைப்படுத்த இவ்வாறான கைதுகளை அவர்கள் நாசூக்காகச் சாதகமாக்கிக் கொள்கின்றனர் இதனடிப்படையிலேயே முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைதும் இடம் பெற்றுள்ளது.
மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் கௌரவ ரிசாத் பதியுத்தீன் அவர்கள் ஒரு சாதாரண பொதுமகன் அல்ல, அவர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியின் தலைவர், முஸ்லிம் சமூகத்தின் தலைவர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலோடு கடுகளவும் சம்பந்தப்படாத இன்னும் சொல்லப் போனால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகளை கடுமையாக விமர்சனம் செய்த ஒரு தலைவர்தான் றிஷாத் பதியுத்தீன் அவர்கள். மேலும் குண்டுத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினருக்கும், குற்றத் தடுப்பு பிரிவினருக்கும் விசாரணைகளின் போது பாரிய ஒத்துழைப்பையும் வழங்கியவர்தான் றிஷாத் பதியுத்தீன் அவர்கள். இருந்தும் அவரை இந்த அரசாங்கம் கைது செய்தமையானது இந்த அரசாங்கத்தை சாபத்துக்குள்ளாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அறிக்கைகள் கையளிக்கப்பட்ட பின்னரும், பழிவாங்கும் நோக்கத்தில் இவ்வாறான கைதுகள் மேற்கொள்ளப்படுவது நிச்சயமாக நாட்டின் நற் பெயருக்கு மேலும் சர்வதேச மட்டத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அறவே சந்தேகம் இல்லை.
தலைவர் றிஷாத் பதியுத்தீன் அவர்களின் அநியாயக் கைது தொடர்பில் தற்போது சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன, தலைவர் அவர்களது கைதினை சர்வதேசத்திற்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும், இந்தப் புனித ரமழான் மாதத்தில் தொழுது இறைவனிடம் மன்றாடுவோம், எல்லாம் வல்ல அல்லாஹ்வே நமக்குப் போதுமானவன் எனவும் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் தெரிவித்துள்ளார்.