Ads Area

பிரதேச சபையின் அசமந்த போக்கினால் இரவில் பயணிக்க முடியாத ஆபத்தான பிரதேசமாக மாறிவரும் மாவடிப்பள்ளி !

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு- அம்பாறை பிரதான வீதியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நிர்மாணித்து காரைதீவு பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் இரவு நேரங்களில் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் ஒளிரவிடப்பட்டு பின்னர் பிந்திய இரவுகளில் மின்துடிப்பை மேற்கொள்வதால்  இருள் சூழ்ந்து பொதுமக்களும், பாதசாரிகளும் வீதியில் அச்சமின்றி பயணிக்க முடியாது பலத்த அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றனர்.

இது தொடர்பில் அண்மையில் ஊடகங்களின் வாயிலாக செய்திகள் வழங்கப்பட்டிருந்த போது நடவடிக்கை எடுக்கப் போவதாக கூறி இதுவரை ஆக்கபூர்வமான எவ்வித செயற்பாடுகளையும் காரைதீவு பிரதேச சபை மேற்கொள்ளாத நிலையில் நேற்றிரவு கட்டாக்காலி மாடுகளில் மோதுண்ட மீன்வியாபாரி பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதுடன் யானைகளின் நடமாட்டம், முதலைகளின் கரையொதுங்குதல், கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் என மாவடிப்பள்ளி பிரதேசம் இரவில் பயணிக்க முடியாதவாறு ஆபத்தான பிரதேசமாக காட்சியளிக்கிறது.

அது மாத்திரமின்றி இருள் சூழ்ந்துள்ளமையால் குறித்த பிரதேசத்தில் பல சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேசத்தில் உருக்குலைந்த மனித உடல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆகவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe