தகவல் - முத்துக்குமார்
பாலியல் வழக்குகளில் தண்டனை பெற்றவரும், மறைந்த தொழிலதிபருமான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் என்பவருடன், மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தால், அவரது மண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பில்கேட்ஸ் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் ஜெப்ரி எட்வர்ட் எப்ஸ்டெய்ன், 66, அமெரிக்காவில் நிதி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்தார். பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்றார். மேலும், சிறுமியரை வைத்து மிகப் பெரிய பாலியல், 'நெட்வொர்க்' நடத்தி வந்த வழக்கில், இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2019 ஆகஸ்டில், அவர் சிறையில் உயிரிழந்தார்.
உலக பணக்காரர்களில் நான்காம் இடம் வகிப்பவருமான பில் கேட்ஸ், 65, மிலிண்டா கேட்ஸ், 56, தம்பதி, விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். இதன் வாயிலாக அவர்களது 27 ஆண்டு கால மண வாழ்க்கை முடிவுக்கு வந்தது, இருவரும் சொத்துக்களை எப்படி பிரித்துக் கொண்டனர் என்பதில்தான் பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது.
இந்திய மக்களில் சிலர் அன்று கூகுளில் அதிகம் தேடியது மைக்ரோசாப்ட் பங்கு விலை என்ன என்பதாகவே இருந்தது. அமெரிக்காவில் விவாகரத்துக்கள் சகஜம், அதுவும் பிரபலங்கள் என்றால் அது மிகவும் சகஜம் என்ற நிலையில் விவாகரத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதுதான் மக்களின் ஆர்வமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க ஊடகங்களில் வெளியான கேட்ஸ் தம்பதி விவகாரத்து பின்னணி விவரம் வருமாறு:
இந்த விவாகரத்து முடிவு குறித்து அமெரிக்காவில் வெளியாகும், 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:பாலியல் வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற, மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டெய்னுடன், 2013 முதல், பில் கேட்ஸ் தொடர்பில் இருந்துள்ளார்.
நியூயார்க் நகரில் ஜெப்ரிக்கு சொந்தமான வீட்டில், பலமுறை அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.இந்த நட்பில் மிலிண்டா கேட்சுக்கு அதிருப்தி இருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.பில் கேட்ஸ் தன் அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவது தொடர்பாக ஜெப்ரி எப்ஸ்டெயினை அடிக்கடி சந்தித்து வந்ததாக, அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
விவகாரத்து குறித்து பில் கேட்ஸ் - மிலிண்டா இடையே, 2019 முதலே பேச்சு நடந்து வருகிறது. தங்கள் மண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக, 2019ம் ஆண்டே, தன் வழக்கறிஞரிடம் மிலிண்டா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.