அமீரகத்தில் ஒட்டகப்பால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் என ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அல் அய்னில் உள்ள ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் முகம்மது அயூப் கூறியதாவது:-
நீரிழிவு நோய்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து ஆகும். ஒட்டகப்பாலில் இரும்பு, துத்தநாகம், தாமிரம் முதலான நுண்ணூட்டச்சத்துக்களும், வைட்டமின் C, பி1, பி2 ஆகியவையும் அதிக அளவில் அடங்கியுள்ளது.
ஒட்டகப்பால் மூளை வளர்ச்சியின்மை, பரம்பரை நோயை குணப்படுத்தும், உடல் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கும், எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதயத்தில் கொழுப்பை படியவிடாது. மாரடைப்பை தடுக்கும். ரத்தசோகை வராமல் தடுக்கும். தோல் ஒவ்வாமை நோய்களை தடுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது
இந்த நிலையில், தற்போது இது குறித்த ஆய்வுகள் அல் அய்ன் பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக நீரிழிவு நோயுடையவர்களுக்கு ஒட்டகப்பால் அளிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது. குறிப்பாக மனித உடலில் ஒட்டக பாலில் உள்ள மூலக்கூறுகள் செல்களுடன் எப்படி வினை புரிகிறது என்பதை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அந்த பாலில் சர்க்கரையை கட்டுப்படுத்தும் பொருள் உள்ளதால் நீரிழிவு நோயானது வெகுவாக கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் ஒட்டகப்பால் அருந்துவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள் தயாரிக்க முயற்சி
இதையடுத்து ஒட்டகப்பாலில் உள்ள புரதங்கள் பிரித்து எடுக்கப்பட்டு நீரிழிவு நோய்க்கு மருந்துகளை தயாரிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற பால் வகைகளை விட குறைந்த அளவு சர்க்கரை மற்றும் குறைந்த கொழுப்பு சத்து உள்ளதால் உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றது.
அமீரகத்தில் 5 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒட்டகப்பாலை பருகுவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.