அண்மையில் போதைவஸ்து தடுப்பினை இலக்காக கொண்டு கல்முனை பிராந்தியத்தில் காவல்துறையினருடன் இணைந்து புலனாய்வு பிரிவினரும் களத்தில் இறங்குகின்றனர்.
அவர்களது போதை ஒழிப்பு வேட்டை நீலாவணையில் இருந்து ஆரம்பிக்கிறது. முதல் கட்டமாக அங்குள்ள கடற்கரை பிரதேசங்களில் தமது சுற்றி வளைப்பினை மேற்கொள்கின்றனர். அச்சுற்றிவளைப்பின் போது அங்கேயுள்ள 'பீச்சோரம்' சில பால்ய வயது வாலிபர்கள் பீர் போத்தல்களுடனும், இன்னும் சிலர் வழமையான வயதிற்கே உரித்தான உணர்வுகளுடன் ஸ்மார்ட் போனில் தம் காதலிகளுடன் கடலை போட்ட நிலையில் இருந்தனர். பீச்சில் பீர் குடித்த பையன்களை பொலிஸார் எச்சரித்து அனுப்புகின்றனர்.
இதே காவல் துறை மருதமுனையை அண்டிய கடற்கரையோரம் நகர்கின்றனர். அங்கே நம் முஸ்லிம் வாலிபப் பிள்ளைகள் போதையின் உச்சத்தில் பொலிசாரிடம் சிக்குகின்றனர். கூடவே, நாம் முன்னெப்போதும் கண்டிராத போதைவஸ்துகளுடன் அவ்விளைஞர்கள் சிக்கியமை சம்பவத்தின் கிளைமெக்ஸ்.
இது போல பாண்டிருப்பில் பொலிஸ் வேட்டையின் போது மதுபானம் உள்ளிட்ட சாதாரண போதைகளுடன் சிலர். அப்படியே கல்முனை கரையோரம் நகர்ந்தால் பாண்டிருப்பில் இருந்து தலைகீழான நிலைமை. நம் வாயில் நுழையாத (பெயர்களுடன்) போதையூட்டும் வஸ்துகளுடன் நம் உம்மத்தின் வளரும் தலைமுறையினர். அப்படியே, சாய்ந்தமருது, மாளிகைக்காடு கடலை அண்டிய பிரதேசங்களில் அந்த விசேட படையணி சுற்றி வளைப்பில் ஈடுபடுகின்றனர். அங்கே வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கு போதை எனும் அவலத்தின் ஆறு ஓடுவதாய் அறிக்கை வருகிறது. அதையடுத்து, காரைதீவு கரையோர ரெய்ட்டின் போது சாதாரணமாய் நிலைவரம் இருந்திருக்கிறது.
போதை தடுப்பு பணிக்கு மாற்று சமூக அதிகாரிகளுடன் சென்ற முஸ்லிம் பொலிஸார் வெட்கித் தலை குனிகின்றனர். கதை கேட்டு நாமும் கவலையுடன் வெட்கி தலை குனிந்தோம்.
நானே கண்டேன், மாளிகைக்காட்டில் ஒரு சம்பவம். வீதியில் நின்ற இராணுவத்தினரின் மீது அதே வீதியால் பைக்கில் Triples போட்டு வேகமாய் ஓடி வந்த மூன்று விடலை பையன்கள் பைக்கை மோதி விட்டனர். அவ்வீதியால் பயணித்த நான் சற்று தடுமாறி சம்பவத்தை ஓரமாய் நின்று அவதானித்தேன். இந்த தறுதலைகளின் செயல் கண்டு நமக்கே கோபம் பொசுக்கென்று வரும், ஆர்மிக்கு எப்படி கோபம் வந்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள்... ஆர்மி அடி தூள், அடித்து விட்டு காற்சட்டை பையினை செக் பண்ணினால் அங்கே கேஜி தூளாம். பின்னர், நடந்தது அகோரம். மூன்று பேரையும் இராணுவத்தினர் வைத்து மொத்தினர். ஈமான் சுமக்க தவறிய சிறுசுகள் கெஞ்சி கதறினர். அதில் ஒருவனுக்கு வயது 15 உம் கடந்திருக்காது என்பது என் மனதை ரணப்படுத்தியது.
இன்னொரு நாள் கடற்கரையில் நானே எனக்குத் தெரிந்த குடும்பம் ஒன்றின் பிள்ளையை மாவா எனும் ஒரு வகை வெற்றிலை புசிக்கும் தருணம் கண்டு எச்சரித்தேன். வீட்டாருக்கு ஒரு வகையாய் மகனாரின் 'போதைச் செய்தியை' எத்தி வைத்தால் "என் பிள்ளை பள்ளிக்கு கல்லு வைக்கும் யோக்கியன், என் பிள்ளை மீது அபாண்டம் சொன்னவன் நாசமத்து போவான்" என்று மறு செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறார்கள்.
நம்மில் சில அப்பாவி பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகள் மீது ஓவர் நம்பிக்கை. அதுவே பிள்ளையின் மீதான கரிசனத்தை கலைத்து விடுகிறது. விழிகளில் படுகிற காட்சிகளும், செவிகளில் விழுகிற செய்திகளும் சொல்லும் தரமன்று. சில காவாலிகள் அப்பாவி பிள்ளைகளுக்கு போதை பழக்கத்தை ஊட்டி 'ஓரினச்சேர்க்கைக்கு' தூண்டுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
அண்மையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊரில் ஒரு பொடியன் மிக ஆபத்தான போதைவஸ்தினை பாவித்து கொண்டு போதையின் உச்சமாகி நள்ளிரவு வேளையில் நிர்வாணமாய் அலைந்து திரிவதாகவும் ஒரு செய்தி காதுக்கு எட்டியது.
நாம் எங்கெங்கோ ஊடகங்களில் பார்த்த,கேட்ட,வாசித்த செய்திகள் இப்போது நம் கண் முன்னே அரங்கேறிக் கொண்டிருப்பது கொடும் காலம் அல்லவா?
இது போன்ற அபத்தங்கள் நம் கதவுகளுக்கு நெருக்கமாகி, நம் கோலிங் பெல்லை அழுத்தும் முன்னே நாம் விழித்து செயலாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு நம் மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
"இந்தப்பிள்ளைகளா இப்படி..?"என்று நாம் அதிர்ச்சி கொள்கிற அளவிற்கு நமது போதை விபரீதம் கை மீறி விட்டது. பெரிய பெரிய குடும்பத்து பிள்ளைகள், கற்றவர்களின் பிள்ளைகள் ஏழைகளின் பிள்ளைகள் எனச் சிலரும் இவ்வலையில் சிக்குண்டு தம் வாழ்வை சீரழித்து கொண்டிருப்பது கூடுதல் தகவலாகும்.
இதில் உழைப்பு தேடி வெளிநாடு சென்றிருக்கும் சில பெற்றோர்களின் பிள்ளைகளும் உள்ளடக்கம். அநேகர் சின்ன சின்ன வாண்டுகள். பலர் 20 பதை கடந்தவர்கள். இவர்களின் நடை உடை பாவனை, முடி வெட்டு என்பன இவர்களின்(போதை) ரூபத்தை அடையாளப்படுத்தி விடும்.
போதைக்கும்பல் இப்படியானவர்களை இலகுவாக கவர்ந்து அவர்களை இப்பழக்கத்திற்கு ஆட்படுத்தி விடுகின்றனர்.
சில தாய்மார்கள், உறவினர்கள் தம் பிள்ளைகளின் தற்போதைய நிலை குறித்து கவனம் செலுத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது.
அன்றொரு நபரிடம் இது குறித்து எனது கவலையை பதிவு செய்தேன். இந்த 'ஸமானில்" நம்மையும் நமது பிள்ளைகளையும் பாதுகாப்பதே பெரிய விடயம் என்றார். அவரை பொறுத்தவரை அவரின் கூற்று நியாயமாய் இருக்கலாம். என்னால் அப்படி இருக்க முடியவில்லை.
பெரும்பாலான முஸ்லிம் எரியாக்களில் இருந்து நம் அவதானம் அல்லது நமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அநேக இளைஞர்கள் போதை எனும் அசாதாரண அனர்த்தத்தில் சிக்கி தத்தளிப்பது தெரிய வருகிறது.
இப்பிரச்சினைகள் குறித்து தனியே பள்ளிவாசல் நிர்வாகங்கள் மீதும் நாம் குற்றம் சாட்டி கடந்து விட முடியாது. போதை ஒழிப்பில் காவல் துறை,பொதுமக்கள், சிவில் அமைப்புகளின் தொடர்ச்சியான பங்களிப்பும் அவசியப்படுகிறது.
நமக்கு அருகாமையிலான நபர் அல்லது பிள்ளை இவ்விடயத்தில் ஈடுபடுவது தெரிந்தால் கண்டும் காணாமல் இருந்து விடும் ஆபத்தான சுயநலம். போதை வெள்ளம் இப்போது வயிற்றளவிற்கு வந்து விட்டது, நெஞ்சளவு பெருக்கெடுத்து நம் சந்ததியினர் மூழ்கும் முன்பே விழித்துக் கொள்வோம்.
எஸ்.ஜனூஸ்
11.05.2021