Ads Area

சம்மாந்துறையில் உள்ள 51 கிராமசேவகர் பிரிவுகளிலும் கிராம மட்ட கொரோனா விழிப்புணர்வுக் குழுக்கள் ஆரம்பிப்பு.

 (வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய சனத்தொகை மற்றும் பரப்பைக் கொண்டுள்ள சம்மாந்துறைப் பிரதேசத்தில் கொரோனா அடுத்த கட்டத்தில் வேகமாகப் பரவலாம் என்று கூறப்பட்டதையடுத்து அங்கு பல முன்னோடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபா மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அங்குள்ள 51கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கிராமமட்ட கொரோனா விழிப்புணர்வுக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வளத்தாப்பிட்டி கிராம சேவையாளர் பிரிவு பெரிதாகையால் அங்கு 3கிராமமட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் ஹனிபா தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்தியத்தில் கோரொனாத் தொற்று  தீவிரமாகப்பரவலாம் என எதிர்பார்க்கப்பட்ட சம்மாந்துறைப் பிரதேசத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கொரோனா அவசர நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தில் இயங்கும் இப்பிரிவுக்கு நிருவாக உத்தியோகத்தர் பாறூக் பொறுப்பாகவிருக்கிறார். இதற்கான ஆலோசனையை ஓய்வுநிலை வைத்திய அதிகாரி மர்சூக் தன்னார்வமாக வழங்கிவருகிறார்.

கிராமிய மட்டக்குழுக்கள் நேரடியாக வொய்ஸ் மெசேஸ் மூலம் இவ் அவசர நிலையத்திற்கு தகவல் வழங்லாம். மேலும் பொதுமக்களும் கொரோனா தொடர்புடைய தகவல்கள் தேவைகள் பிரச்சினைகளை 24 மணிநேரமும் அங்கு சமர்ப்பிக்கலாம் என பிரதேச செயலாளர் ஹனிபா கூறுகிறார்.

சம்மாந்துறைப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் 97 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களில்  78பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். தற்போது ஆக   14பேர் ஆஸ்பத்திரிகளில் சிகச்சைபெற்றுவருகின்றமையும் 37பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

பாரிய சம்மாந்துறை பிரதேசத்தின் நிலைமை பற்றி பிரதேச செயலாளர் எஸ்எல்எம்.ஹனிபா கூறுகையில்:

கரையோரப் பிரதேசத்தில் சம்மாந்துறையில்தான் அடுத்த தீவிரமான நோய் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அம்பாரையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது.

எனவே இது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டிய காலகட்டமாகும். தயவு செய்து சகலரும்  கடந்தகால செயற்பாடுகளுக்கு மேலதிகமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அன்பாக கேட்டுக்கொள்கிறேன் .

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களை மிகுந்த அவதானத்துடன் கண்காணிப்பது.கிராம மட்ட குழுக்களை வலுப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகமாக கவனம் எடுப்பது.பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தாலும் உள் வீதிகளில் மக்கள் அதிக நடமாட்டம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவது.

தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட உடன் முதல்நிலை தொடர்பாளர்களை விரைவாக அறிக்கையிடுதலும் தனிமைப்படுத்தலும். யாராவது கிராம மட்ட உத்தியோகத்தர்கள் அசிரத்தை உடன் செயல்படுவது  சம்பந்தமாக அறிக்கை கிடைக்கப்பெறும் பட்சத்தில் அது தொடர்பாக அதிகபட்ச கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe