Ads Area

அரசியலுக்காக பேதங்ளைப் பேசி அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை : ஏ.எல்.எம் அதாஉல்லா எம்.பி

மாளிகைக்காடு நிருபர்

இன உறவுகளை ஸ்திரப்படுத்தும் வகையிலான சேவைகளை முன்னெடுப்பது குறித்து அரசியல் தலைவர்கள் சிந்திப்பதுடன் அரச அதிகாரிகளும் இதற்குத் துணைபுரிய வேண்டும். அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலயம் அன்று ரோமன் கத்தோலிக்க பாடசாலையாக இருந்தபோது, முஸ்லிம் மாணவர்கள் பலருக்கு மூத்த தமிழ் ஆசான்களே ஏடு துவக்கி கல்வியறிவூட்டினர். இவ்வாறுதான் எமது பிதேசத்தின் பல பாடசாலைகளிலும் நிலைமைகள் இருந்தன என தேசிய காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாரளுமன்ற உறுப்பினர்  ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அல்- ஹிதாயா வித்தியாலய ஆசிரியர்களுடன் கிழக்கு வாசலில் நடைபெற்ற விஷேட சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம்களின் சுட்டு விரலைப் பிடித்து ஏடுகளில் எழுதப்பழக்கிய எமது மூத்த தமிழ் ஆசான்களை முஸ்லிம் சமூகம் மறந்துவிட முடியாது. முஸ்லிம்களின் கல்வி அறிவுக்கு வித்திட்ட மூத்த தமிழ் ஆசான்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவும், குருகடாட்சத்துக்கு மதிப்பளித்தும் முஸ்லிம் ஆசிரியர்கள் செயற்பட வேண்டும்.

இப்போது,அதிகமான தமிழ் சிறுவர்கள் இந்த அல்-ஹிதாயா பாடசலையில் முஸ்லிம் பிள்ளைகளுடன் கலந்து கல்வி பயில்கின்றனர்.எனவே இங்குள்ள முஸ்லிம் ஆசிரியர்கள் மாறுதல்கள் பெற்றுக்கொண்டு வேறு பாடசலைகளுக்குச் செல்லாமல், இங்குதான் தொழிலைத் தொடர வேண்டும். மூத்த தமிழ் ஆசான்கள் எமக்கு ஏடுதுவக்கித் தந்த கைங்கரியத்துக்குப் பதிலாக,தமிழ் பிள்ளைகளுக்கு கல்வியறிவைப் புகட்டுவதுதான், குருகடாட்சத்துக்கு நாம் செய்யும் கௌரவமாக இருக்கும்.

இதற்காகத்தான் அக்கரைப்பற்றுத் தொழினுட்பக் கல்லூரி, வைத்தியசாலை, வீதி அபிவிருத்தி அதிகார சபை எனப் பல அரச நிறுவனங்ளைக் கொண்டு வந்தோம். பல்லின சமூகத்தவர்களின் பண்பாடுளைப் புரிந்துகொள்ளவும், இன பரஸ்பரம் ஏற்படும் முன்மாதிரிப் பிரதேசமாகவும் எமது பிரதேசம் இருக்க வேண்டுமென்பதுதான் எமது பார்வைகளாகும். அரசியலுக்காக பேதங்ளைப்பேசி, அதிகாரங்களை அடைந்து கொள்ளும் எழிய சிந்தனைகள் எம்மிடம் இல்லை. கல்முனை விவகாரத்தையும் எமது தேசிய காங்கிரஸ் பரந்தளவில்தான் பார்க்கிறது. காலம் கைகூடி வருகையில் அவற்றை மக்களுக்குப் புரிய வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe