பிரைன் டியூமர் எனப்படும் மூளையில் ஏற்பட்ட ஒரு பெரிய கட்டியால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய ஒரு பெண் குழந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு, அமீரக உச்ச கவுன்சில் உறுப்பினரும் அஜ்மானின் ஆட்சியாளருமான ஷேக் ஹுமாய்ட் பின் ரஷீத் அல் நுவைமி அவர்கள் நிதியளித்து அந்த சிறுமியின் உயிரை காப்பாற்றியதுடன், தற்போது அந்த சிறுமியின் குடும்பத்திற்காக வீடு ஒன்றினை வாங்கவும் அவர் உத்தரவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.
மொராக்கோ நாட்டில் வசிக்கும் வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறுமி ஒருவர் அவளது மூளையில் ஏற்பட்ட ஒரு பெரிய கட்டியால் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி இன்றி அவதிப்படுவதாக கடந்த ரமலானில் மாண்புமிகு ஷேக் ஹுமாய்ட் பின் ரஷீத் அல் நுவைமி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாக மொராக்கோவின் ரபாட்டில் உள்ள ஷேக் சயீத் மருத்துவமனையில் அந்த சிறுமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், ஏழு மணி நேரம் நீடித்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் நல்ல உடல்நலத்துடன் மருத்துவமனையிலிருந்து சென்றதாகவும் அஜ்மான் ஆட்சியாளரின் தனியார் செயலாளர் ஹமாத் பின் கலிதா அல் காஃப்லி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அல் பயான் செய்தி நிறுவனத்திற்கு அவர் கூறியதாவது, “மொராக்கோ பெண் குழந்தை ஒன்று அவளது தலையில் ஏற்பட்ட மூளை கட்டியால் அவதிப்படுவதைப் பற்றி கடந்த ரமலானில் எங்களுக்கு தகவல் கிடைத்தது, அவளுக்கு ஒரு நுட்பமான அறுவை சிகிச்சை தேவைப்பட்டது, அவரது நிலை குறித்து மாண்புமிகு ஷேக் ஹுமாய்ட் பின் ரஷீத் அல் நுவைமிக்கு நாங்கள் தகவல் கொடுத்தோம், அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யும்படி மாண்புமிகு ஆட்சியாளர் உத்தரவிட்டார்” என்றுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: “பின்னர் சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பு கொள்ளப்பட்டனர், அவர் தனது தாயுடன் ரபாத்துக்கு அனுப்பப்பட்டார், அவருக்கான அறுவை சிகிச்சை அங்குள்ள ஷேக் சயீத் மருத்துவமனையில் ஒரு மருத்துவ குழுவினரால் செய்யப்பட்டது. அவர் தலையில் இருந்த கட்டி அகற்றப்பட்டு, சிறுமி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வெளியேற்றப்பட்டார்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது மாண்புமிகு அஜ்மான் ஆட்சியாளர் அவர்கள் மொராக்கோவிற்கு பயணம் செய்திருந்தபோது, அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவரின் மனிதாபிமான செயலுக்காக நன்றி தெரிவித்தனர்.
மேலும் அவர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு தனியாக ஒரு வீட்டை வாங்கவும் உத்தரவிட்டார் என்றும் அஜ்மான் ஆட்சியாளரின் தனியார் செயலாளர் ஹமாத் பின் கலிதா அல் காஃப்லி கூறியுள்ளார்.
செய்திக்கு நன்றி - https://www.khaleejtamil.com/